விவசாயத்தில் ஈடுபட்டதால் விருது பெற்ற மாணவர் வளர்த்து வந்த 13 மாடுகள் பரிதாப பலி
- மேத்யூ வளர்த்து வந்த மாடுகள் எப்படி இறந்தன? என்பதை கண்டறிய, இறந்து போன மாடுகள் அனைத்தும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
- மாடுகள் இறந்ததால் மாணவர் மேத்யுவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி வெள்ளியமட்டம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவர் மேத்யூ பென்னி. இவரது தந்தை பென்னி ஏராளமான மாடுகளை வளர்த்து வந்தார். அதனை வைத்து பால் பண்ணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் பென்னி திடீரென இறந்துவிட்டார். இதனால் தனது தந்தை வளர்த்துவந்த மாடுகளை, மாணவன் மேத்யூ பராமரிக்க வேண்டிய நிலை உருவானது. இதையடுத்து அவர் தனது தந்தையின் பண்ணையில் இருந்த மாடுகள் அனைத்தையும் பராமரித்து பால் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
சிறு வயதில் மாடுகளை சிறப்பாக வளர்த்து வந்ததன் காரணமாக பிரபலமானார். இதன் காரணமாக மாணவன் மேத்யூவுக்கு விருதும் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர் வளர்த்து வந்த 22 மாடுகளில் பல மாடுகள் அடுத்தடுத்து சுருண்டுவிழுந்தன. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர்.
இருந்தபோதிலும் பண்ணையில் இருந்த 13 மாடுகள் அடுத்தடுத்து இறந்தன. இதனைப்பார்த்து மாணவன் மேத்யூ அதிர்ச்சியடைந்தார். தான் வளர்த்து வந்த மாடுகள் இறந்துகிடப்பதை பார்த்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மூலமட்டம் அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மேத்யூ வளர்த்து வந்த மாடுகள் எப்படி இறந்தன? என்பதை கண்டறிய, இறந்து போன மாடுகள் அனைத்தும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது மரவள்ளி கிழங்கு தோல் சாப்பிட்டதே மாடுகள் இறந்ததற்கு காரணம் என்பது தெரியவந்தது.
மாடுகள் சாப்பிட்ட மரவள்ளி கிழங்கு தோலில் ஹைட்ரோசியானிக் அமிலம் கலந்திருந்ததால் அவை இறந்திருக்கின்றன. இறந்தவற்றில் 5 மாடுகள் கறவை மாடுகள் ஆகும். 13 மாடுகள் இறந்ததால் மாணவர் மேத்யுவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
அவர் மாடுகளுக்கு காப்பீடு எதுவும் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் அவருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தான் வளர்த்து வந்த மாடுகள் இறந்தது மாணவரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இறந்த மாடுகள் அனைத்தும் அங்குள்ள தோட்டத்தில் குழி தோண்டி புகைக்கப்பட்டன.
மற்ற மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.