செய்திகள்

உலக சுற்றுச்சூழல் நாள்: பிளாஸ்டிக்கை ஒழிப்போம்

Published On 2018-06-05 05:25 GMT   |   Update On 2018-06-05 05:25 GMT
உலகம் முழுவதும் உலக சுற்றுச்சூழல் நாள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற கருதுபொருளை மையமாக கொண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. #beatplasticpollution #WorldEnvironmentDay
புதுடெல்லி:

உலக சுற்றுச்சூழல் நாள் ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும். இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972-ம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இச்சபையின் சார்பில் இத்தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு இந்தியா இதனை நடத்துகிறது.


சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத்தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.

நீதியான, தாங்குநிலை சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மக்கள் தங்கள் நேரடியான பங்களிப்பைச் செலுத்துவதற்கு அவர்களை ஊக்குவித்தல், சூழல் தொடர்பான விடயங்களில், மக்களுடைய மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய பொறுப்பு சமுதாயங்களுக்கு உண்டு என்ற புரிந்துணர்வை உருவாக்குதல், பாதுகாப்பானதும், வளமுள்ளதுமான எதிர்காலத்தை பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற மக்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காகக் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளை இந்த நிகழ்வுகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன.


ஒடிசாவைச் சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உலக சுற்றுச்சூழல் நாளன்று பிளாஸ்டிக் மாசு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பூரி கடற்கரையில் மணற்சிற்பம் வடித்துள்ளார். பிளாஸ்டிக் பாட்டில்களால் செதுக்கப்பட்டுள்ள அந்த ஆமை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய ஆமை மணற்சிற்பம் ஆகும். இது 50 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்படும். இந்த ஆண்டு பிளாஸ்டிக் மாசுவை ஒழிப்போம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்தியா முன்னின்று நடத்துகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உட்பட பல தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். #beatplasticpollution #WorldEnvironmentDay

Tags:    

Similar News