null
4 மாத குழந்தையின் கைக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை.. கேரளாவில் அதிர்ச்சி
- கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக 4 மாத குழந்தைக்கு கையில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை நாக்கில் செய்யப்பட்டது.
- மருத்துவமனையின் அலட்சியத்தாலேயே இந்த தவறு நடந்துள்ளது என்றும் குழந்தைக்கு நாக்கில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக 4 மாத குழந்தைக்கு கையில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை நாக்கில் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தைக்கு கையில் 6 விரல்கள் உள்ளதால் கூடுதல் விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்க கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் குழந்தையை அதன் பெற்றோர்கள் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அறுவை சிகிச்சை அறைக்கு வந்த மருத்துவர் குழந்தையை பரிசோதித்த போது, குழந்தைக்கு நாக்கு கட்டு (Tounge tie) இருந்ததைப் பார்த்து அதை அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர் தவறுதலாக குழந்தையின் நாக்கில் அறுவை சிகிச்சை செய்தாலும் இது குழந்தைக்கு நன்மையே பயக்கும் என்றும் இதனால் குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.
ஆனால் குழந்தையின் பெற்றோர்கள், மருத்துவமனையின் அலட்சியத்தாலேயே இந்த தவறு நடந்துள்ளது என்றும் குழந்தைக்கு நாக்கில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.