வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்த பழங்குடியின ஜோடி மர்ம மரணம்
- இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- மரணத்திற்கு வேறு எதுவும் காரணமா? என்பது மர்மமாக உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள நிரவில்புழா பகுதியில் கீச்சேரி பழங்குடியினர் குடியிருப்பு இருக்கிறது. இங்குள்ள ஒரு வீட்டில் பத்திரி மண்டபம் பகுதியை சேர்ந்த மணிக் கூத்தன்(வயது22), பிலக்காவு பகுதியை சேர்ந்த வினிதா(22) ஆகியோர் வசித்து வந்தனர்.
பழங்குடியின வகுப்பை சேர்ந்த அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு கீச்சேரி பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் அடித்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், மணிக்கூத்தனின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு மணிக்கூத்தன் மற்றும் அவரது மனைவி வினிதா ஆகிய இருவரும் வீட்டின் கூரையில் தூக்கில் பிணமாக தொங்கினர். அவர்களது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இதுகுறித்து தொண்டர் நாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்பு இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்தார்களா? அல்லது அவர்களது சாவுக்கு வேறு எதுவும் காரணமா? என்பது மர்மமாக உள்ளது. இது பற்றி அக்கம்பக்கதத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது மணிக்கூத்தன் மற்றும் அவரது மனைவியை கடந்த ஒருவாரமாக அக்கம்பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை என்று தெரிவித்தனர். இதனால் அவர்கள் இறந்து ஒரு வாரம் ஆகியிருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் வினிதா கர்ப்பமாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களை பற்றி அவர்களது உறவினர்களி டம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வீட்டை விட்டு வெளியேறிய மணிக்கூத்தன் மற்றும் வினிதா ஆகிய இருவரும் கீச்சேரியில் இருப்பது தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.
வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து வாழந்துவந்த பழங்குடியின ஜோடி மர்மமான முறையில் இறந்திருப்பது வயநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.