இந்தியா

அசோக் கெலாட்

மக்கள் நலத் திட்டத்தை இலவச திட்டம் என்று கூற முடியாது- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

Published On 2022-08-15 13:05 GMT   |   Update On 2022-08-15 13:05 GMT
  • வளர்ந்த நாடுகளில் ஏழைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
  • மக்கள் நலனுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்கிறது.

ஜெய்பூர்

பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்தும் இலவச திட்டங்களை பிரதமர் மோடி அண்மையில் விமர்சனம் செய்திருந்தார். இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் ஆகியோர் பிரதமர் மோடியின் கருத்துக்கு பதில் அளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து மக்களுக்கான நலத்திட்டத்தை இலவச திட்டம் என்று கூற முடியாது என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டும் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பேசிய அவர், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்றார். வளர்ந்த நாடுகளில் ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கு வாரம்தோறும் நிதி உதவி வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் நலனுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்கிறது என்றும், ராஜஸ்தானில், ஒரு கோடி பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது, இதுபோன்ற திட்டங்களை இலவசம் என்று கூற முடியாது என அவர் விளக்கம் அளித்தார்.

மதத்தைப் பற்றி பேசுபவர்கள், சமத்துவமின்மை மற்றும் தீண்டாமையை எப்படி அகற்றுவது என்பதில் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புவதாகவும், மதத்தின் பெயரால் தேசத்தை கட்டமைக்க நினைப்பவர்களுக்கு பாகிஸ்தான் ஒரு உதாரணம் என்றும் என்றும் கெலாட் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News