சுற்றிவளைத்து கெரோ செய்த பாஜக தொண்டர்கள்... பிரசாரத்தை ரத்து செய்து திரும்பிய எடியூரப்பா
- சிக்கமகளூரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக எடியூரப்பா இன்று சென்றார்.
- சி.டி.ரவியின் ஆதரவாளர்கள் எடியூரப்பாவின் காரை சூழ்ந்துகொண்டு கெரோ செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடகம் மாநிலத்தில் பாஜக-வில் உள்கட்சி மோதல் வலுத்து வருகிறது. கர்நாடகாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் மகனை தனது பாரம்பரிய சிக்காரிபுரா தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்தார். ஆனால் கட்சி தலைமை ஒப்புதல் வழங்காத நிலையில் எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே உரசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக எடியூரப்பா இன்று சென்றார். விஜய் சங்கல்ப யாத்திரைக்கு தலைமை தாங்க சென்ற அவரது காரை சி.டி.ரவியின் ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு கெரோ செய்தனர். இதனால் அப்செட் ஆன எடியூரப்பா தனது பிரசார பயணத்தை ரத்து செய்து, திரும்பிச் சென்றார். இதன்மூலம் பாஜகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதில், விஜய் சங்கல்ப் யாத்திரையில் கலந்து கொள்ளாமல் எடியூரப்பா அந்த இடத்தை விட்டு வெளியேறியதையும், அந்த இடத்தில் இருந்த சி.டி.ரவி தனது ஆதரவாளர்களுடன் வேறு திசையில் நடந்து செல்வதையும் காண முடிகிறது.