இந்தியா

பாஜக சார்பில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்செல்வன் தொடர்ந்து 3 ஆவது முறையாக வெற்றி

Published On 2024-11-23 14:06 GMT   |   Update On 2024-11-23 14:06 GMT
  • கேப்டன் தமிழ்ச்செல்வன் 7895 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
  • தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் தமிழ்ச்செல்வன்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மகாயுதி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] மற்றும் மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] இடையே கடுமையான போட்டி நிலவியது.

பெரும்பான்மைக்கு 145 இடங்கள் வேண்டியிருக்கும் நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக [ மகாயுதி] கூட்டணி 231 இடங்களில் முன்னிலை பெற்று மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 7895 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

சயான் கோலிவாடா தொகுதியில் 2014, 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான கேப்டன் தமிழ்ச்செல்வன் தற்போது தொடர்ந்து 3 ஆவது முறையாக வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ச்செல்வன் மகாராஷ்டிராவில் வார்டு கவுன்சிலராக இருந்து எம்.எல்.ஏ.வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News