சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை நிரூபிக்கும் ஆவணங்களை காட்டவேண்டும் - ராகுலுக்கு சாவர்க்கர் பேரன் சவால்
- ராகுல் காந்தி சாவர்க்கரை அவமதித்து விட்டார் என பா.ஜ.க, சிவசேனா கட்சிகள் குற்றம் சாட்டின.
- தேசபக்தர்களின் பெயர்களை அரசியலை ஊக்குவிக்கப் பயன்படுத்துவது தவறு என்றார் சாவர்க்கர் பேரன்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை என தெரிவித்தார். இதனால் ராகுல் காந்தி சாவர்க்கரை அவமதித்து விட்டார் என பா.ஜ.க, சிவசேனா கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை நிரூபிக்கும் ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு சாவர்க்கர் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் சாவர்க்கர் இல்லை என்பதால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ராகுல் காந்தி கூறி வருகிறார். சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை நிரூபிக்கும் ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என அவருக்கு சவால் விடுகிறேன்.
தேசபக்தர்களின் பெயர்களை அரசியலை ஊக்குவிக்கப் பயன்படுத்துவது தவறானது மற்றும் வருந்தத்தக்கது. ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.