சபரிமலையில் மழை நீடிப்பு: ஐயப்ப பக்தர்கள் கவனமுடன் யாத்திரை மேற்கொள்ள அறிவுறுத்தல்
- ஐயப்ப பக்தர்கள் இரவு நேர பயணத்தை எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும்.
- பம்பை திரிவேணியிலும் குளிக்க தடை விதிக்கப்படும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்துவருவதை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய திருவிதாங்கூர் தேவசம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன் காரணமாக மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள், நெரிசலில் சிக்கி அவதிக் குள்ளாகாமல் சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிகிறது. விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் சன்னிதானம் அருகே உள்ள வலிய நடைப் பந்தலில் பெரும்பாலான நேரங்களில் பக்தர்கள் நீண்டநேரம் காத்து நிற்பதை காண முடிவதில்லை.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கேரள மாநி லத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சபரிமலையிலும் அவ்வப் போது மழை பெய்தது. இருந்தபோதிலும் மழையை பொருட்படுத்தாமல் யாத்திரை மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள்.
இந்தநிலையில் சபரி மலையில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் மூடுபனியை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்கு இன்றும் மழை பெய்தது. பக்தர்கள் மழையை பொருட்படுத்தா மல் மலையேறி சென்றபடி இருந்தனர்.
ஏராளமான பக்தர்கள் மழை கோர்ட்டு அணிந்தபடி வந்து சாமி தரிசனம் செய்தார்கள். மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் சபரிமலை வரக்கூடிய பக்தர்கள் கவனமுடன் யாத்திரையை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
ஐயப்ப பக்தர்கள் இரவு நேர பயணத்தை எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும் என்று பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பம்பை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் திரிவேணி பகுதியை தவிர மற்ற இடங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பம்பை ஆற்றில் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் பம்பை திரிவேணியிலும் குளிக்க தடை விதிக்கப்படும்.
மழை தொடர வாய்ப்பு இருப்பதால் பத்தினம்திட்டா மாவட்டத்தில் வருகிற 18-ந்தேதி வரை அனைத்து குவாரிகள் மற்றும் மலை உச்சியில் இருந்து மண் வெட்டுதல், ஆழமாக தோண்டுதல், மண் அள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.