இந்தியா

தோல்வி.. ஒற்றுமையின்மை.. முக்கிய முடிவுகள்.. கடும் நடவடிக்கை - காங்கிரஸ் செயற்குழுவில் கார்கே கறார்

Published On 2024-11-30 09:54 GMT   |   Update On 2024-11-30 09:54 GMT
  • இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  • தேர்தல் பணிகளைத் தேர்தல் நடத்துவதற்கு ஓராண்டுக்கு முன்பே தொடங்க வேண்டும்

நடப்பு மாதத்தில் இரண்டு சட்டமன்றத் தேர்தலை சந்தித்து முடித்த பின்னர் காங்கிரஸ் தேசிய செயற்குழு டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று கூடியது. இந்தியா கூட்டணியில் உள்ள ஹேமந்த் சோரனின் ஆளும் முக்தி மோர்ச்சா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் காங்கிரசின் இந்தியா கூட்டணி கட்சிகள் மகாராஷ்டிராவில் அமைத்த மகாயுதி கூட்டணி தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. முன்னதாக மக்களவை தேர்தலில் இந்த கூட்டணி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியை பின்னுக்குத் தள்ளி அதிக இடங்களை கைப்பற்றிய நிலையில் தற்போது 6 மாதங்கள் கழித்து நடந்துள்ள சட்டமன்றத் தேர்தலில் 288 க்கு மொத்தமாகவே 46 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது.

மேலும் முன்னதாக நடந்த அரியானா சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி தோற்றது. இந்த நிலையில் நேற்று கூடிய காங்கிரஸ் செயற்குழு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த செயற்குழுவில் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்சிகள் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி காட்டமாக பேசியுள்ளார்.

மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மறுமலர்ச்சி பெற்றது. ஆனால் அடுத்தடுத்த மாநில சட்டமன்ற தேர்தல்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க வில்லை. தேர்தலில் கள நிலவரம் நமக்கு சாதகமாக இருந்தது. ஆனால் களம் நமக்கு சாதகமாக இருப்பது வெற்றிக்கு உத்தரவாதம் அல்ல. சூழ்நிலையை முடிவுகளாக மாற்ற நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

சூழ்நிலைகளை நாம் நமக்கு சாதகமாக பயன்படுத்த முடியாமல் போனதுக்கு என்ன காரணம்? கட்சியின் குறைபாடுகளை சுயபரிசோதனை செய்து அடையாளம் காண வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடைபெற்ற மகாராஷ்டிரா, அரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய 4 மாநிலங்களில் 2-ல் இந்தியா கூட்டணி அரசு அமைத்த போதிலும் கட்சியின் சொந்த செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. 

இந்த முடிவுகள் நமக்கு ஒரு செய்தியை தந்துள்ளது. இதில் இருந்து நான் உடனடியாக கற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. கட்சியை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்த வேண்டும். நமது பலவீனங்களை நிவர்த்தி செய்ய வேண்டும்.

நான் தொடர்ந்து சொல்லும் முக்கியமான விஷயம் என்னவென்றால் கட்சியில் தலைவர்களுக்கிடையேயான ஒற்றுமையின்மை மற்றும் ஒருவருக்கொருவர் எதிரான அறிக்கைகளை விடுவது நமக்கு தீங்கு விளைவிக்கும். நாம் ஒற்றுமையாக தேர்தலில் போராட வேண்டும். ஒருவருக்கொருவர் எதிராக அறிக்கை விடுவதை நிறுத்தாவிட்டால், அரசில் ரீதியாக எப்படி எதிரிகளைத் தோற்கடிக்க முடியும்? எனவே ஒழுக்கத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது அவசியம். எந்த சூழ்நிலையிலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

காங்கிரசின் வெற்றி என்பது நமது வெற்றி. கட்சியின் தோல்வி என்பது நமது தோல்வி என்பதை அனைவரும் உணர வேண்டும். நமது பலம் கட்சியின் பலத்தில்தான் உள்ளது. தேசிய பிரச்சினைகள் மற்றும் தேசிய தலைவர்களை வைத்து எத்தனை நாள் தான் நாம் மாநில தேர்தல்களைச் சந்திக்க முடியும்? உள்ளூர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கேற்றவாறு திட்டங்களைச் செயல்படுத்துவது முக்கியம்.

 

தேர்தல் பணிகளைத் தேர்தல் நடத்துவதற்கு ஓராண்டுக்கு முன்பே தொடங்க வேண்டும்.  எதிர்காலம் மிகவும் சவாலாக உள்ளது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நமது பலவீனங்களைச் சரிசெய்து, கட்சி அமைப்புகளில் உள்ள குறைபாடுகளைக் களைய கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். 

Tags:    

Similar News