இந்தியா

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

Published On 2024-12-11 09:12 GMT   |   Update On 2024-12-11 09:52 GMT
  • டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி கொடுத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்.
  • டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி மலைப்பகுதியில் இருந்து சுற்றி உள்ள 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 29-ந் தேதி மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம், கடையடைப்பு நடந்தது. மேலும் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த தனித் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் உரையாற்றினர்.

இது தொடர்பாக மக்களவையில் பேசிய விடியோவை எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், "மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்ப பெறக்கோரி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடிதம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி, ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News