சரத் பவார் கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
- அஜித் பவாருக்குதான் தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
- சரத்பவார் சட்டப்போராட்டம் நடத்தும் அதேவேளையில், புதிய கட்சி பெயரை அறிவிப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவியவர் சரத் பவார். இந்த கட்சியில் முக்கிய தலைவராக விளங்கிய அவரின் அண்ணன் மகன் அஜித் பவார் பெரும்பான்மை எம்.எல்.ஏ.-க்களுடன் தனியாக செயல்பட்டு வந்தார். ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா- பாஜனதா கூட்டணி ஆட்சியில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் சில எம்.எல்.ஏ.-க்கள் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதனால் சரத் பவார் அணி- அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்தது. பின்னர் தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவாருக்கு சொந்தம் எனத் தெரிவித்து கடிகாரம் சின்னத்தையும் அவரது அணிக்கே வழங்கியது.
இதனால் சரத் பவார் புதுக்கட்சியை தொடங்கும் நிலை ஏற்பட்டது. அவர் தனது கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் எனப் பெயர் வைத்திருந்தார். இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில் தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்காக சின்னம் ஒதுக்கியுள்ளது. சரத் பவார் கட்சிக்கு "கொம்பு இசைக்கருவி ஊதும் மனிதன் (Man blowing Turha- பராம்பரிய இசைக்கருவி)" சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
வரும் மக்களவை தேர்தலில் சரத்பவார் கட்சி- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா- காங்கிரஸ் ஆகியவை ஒன்றிணைந்து போட்டியிட இருக்கின்றன. விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.