இந்தியா

அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி

3 நாள் பயணமாக இந்தியா வருகிறார் எகிப்து அதிபர் அல் சிசி

Published On 2023-01-22 00:19 GMT   |   Update On 2023-01-22 00:19 GMT
  • எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக 24-ம் தேதி இந்தியா வருகிறார்.
  • குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா 26-ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகைகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன.

இந்தக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி (68) கலந்து கொள்கிறார். இந்திய குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் ஒருவர் அழைக்கப்பட்டு வருவது இதுவே முதல் முறை ஆகும். குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படைப்பிரிவும் கலந்து கொள்கிறது.

இந்நிலையில், எகிப்து அதிபர் அல் சிசி 3 நாள் அரசுமுறைப் பயணமாக 24-ம் தேதி இந்தியா வருகிறார். அவருக்கு 25-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாயப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. அன்று மாலை அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்து கவுரவிக்கிறார்.

எகிப்து அதிபர் சிசி, பிரதமர் மோடியுடன் இரு தரப்பு உறவுகள், உலகளவிலான விஷயங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் இந்திய தொழில் அதிபர்களையும் சந்தித்துப் பேச உள்ளார். இந்தியாவும், எகிப்தும் விவசாயம், இணையத்தகவல் ஊடுவெளி, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக அரை டஜனுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடும். இரு தலைவர்கள் சந்திப்பின்போது, பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்க உள்ளனர்.

எகிப்து நாட்டில் இந்திய தரப்பில் 50 நிறுவனங்கள் 3.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News