தேர்தல் நடத்தை விதிமீறல்- பாஜக, காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
- பிரதமர் மோடி மீது காங்கிரசும், ராகுல்காந்தி மீது பாஜகவும் நோட்டீஸ்.
- நோட்டீஸ் தொடர்பாக வரும் 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவு.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் சொத்துக்கள், நிலங்கள், தங்கம் ஆகியவற்றை முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும் என்று பேசினார்.
பிரதமரின் இந்த பேச்சு வெறுப்பை தூண்டுகின்றன என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கொண்ட குழு தேர்தல் ஆணையத்தில் கடந்த திங்கட்கிழமை புகார் மனு அளித்தது.
பிரதமருக்கு எதிரான புகார் குறித்து தேர்தல் ஆணையம் முதலில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இதே குற்றச்சாட்டை பிரதமர் மோடி தொடர்ந்து தேர்தல் பிரசார கூட்டங்களில் காங்கிரஸ் மீது சுமத்தினார். இது காங்கிரஸ் கட்சியை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
இதற்கிடையே பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் அளித்த புகாரை ஆய்வு செய்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
பிரதமரின் பேச்சு தொடர்பான புகார் பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன. அதே நேரத்தில் பிரதமருக்கு எதிராக வழக்கு தொடரவும் காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.
இந்த நிலையில் முஸ்லிம்கள் குறித்து பேசியது தொடர்பாக காங்கிரஸ் அளித்த புகார் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டது.
அவதூறாக பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகும். இது தொடர்பாக வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்குள் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாகவும் அவர் மீது பா.ஜனதா தேர்தல் ஆணயைத்தில் புகார் அளித்து இருந்தது. பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாக தெரிவித்தது.
ராகுல்காந்தியின் பேச்சும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையம் கருதியது. இதைத்தொடர்ந்து ராகுல்காந்தியும் வருகிற 29-ந் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக பா.ஜனதா, காங்கிரஸ் தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய தலைவர்களின் பேச்சு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.