வயநாடு தொகுதியில் போட்டியிடும் ஆனி ராஜா மீது தேர்தல் ஆணையத்தில் புகார்
- வேட்பாளர்கள் அனைவரும் தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- புகார் தொடர்பான வீடியோ காட்சியையும் கொடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி.யான ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுரேந்திரன் ஆகியோரும் களமிறங்கி உள்ளனர். அந்த தொகுதியில் அவர்கள் உள்பட 9 பேர் போட்டியிடுகிறார்கள்.
வேட்பாளர்கள் அனைவரும் தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளரான ஆனி ராஜாவுக்கு நடத்தப்பட்ட பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 20-ந்தேதி கல்பேட்டை பகுதியில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் தலைமையில் ஆனி ராஜாவுக்காக பேரணி நடத்தப்பட்டது.
அந்த பேரணியில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டதாகவும், இது தேர்தல் விதிகளை மீறிய செயல் எனவும் ஆனி ராஜா மீது தேர்தல் ஆணையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அப்போது புகார் தொடர்பான வீடியோ காட்சியையும் அவர்கள் கொடுத்துள்ளனர். இது வயநாடு தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.