சத்தீஸ்கரில் என்கவுண்டர்: ஒரு ஜவான் உயிரிழப்பு - 4 மாவோயிஸ்டுகள் கொலை
- பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- தேடுதல் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதனை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் தெற்கு அபுஜ்மாத் காட்டில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட மோதலில் தலைமைக் காவலர் சன்னு கரம் உயிரிழந்தார். பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சூடு துவங்கியது. நேற்றிரவு துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்ட பின், நான்கு மாவோயிஸ்டுகளின் உடல்கள், ஏ.கே.-47 ரக துப்பாக்கி மற்றும் எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.
என்கவுன்டரை தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.