சமூகவலைதளங்களில் புகைப்படத்துடன் பகிர்ந்தார்:பூனையை கண்டுபிடித்து தாருங்கள்- போலீசில் புகார்
- கடந்த16-ந்தேதி அந்த பூனை காணாமல் போனது.
- பூனை பின்னங்கால்களை பயன்படுத்தி நடந்து வந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மன்னுத்தி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது வீட்டில் கன்கு என்ற பெயரில் ஒரு பூனையை வளர்த்து வந்தார். பிறக்கும் போதே முன்னங்கால்கள் இல்லாமல் பிறந்த அந்த பூனையை மிகவும் பாசமாக வளர்த்து வந்தார்.
முன்னங்கால்கள் இரண்டும் இல்லாத நிலையில் அந்த பூனை பின்னங்கால்களை பயன்படுத்தி நடந்து வந்தது. இரண்டு கால்கள் இல்லாத நிலையில் பின்னங்கால்களை பயன்படுத்தி மிகவும் சுறுசுறுப்பாக அந்த பூனை நடந்து செல்லும். இதனால் சதீசின் குடும்பத்தினர் மட்டுமின்றி, அக்கம்பக்கத்தினருக்கு மிகவும் பிடித்தமான பூனையாக இருந்தது.
அந்த பூனை வீட்டு காமபவுண்டு சுவற்றின் மீது இரண்டு கால்களை ஊன்றி நிமிர்ந்து நின்று கொண்டிருப்பதை அந்த வழியாக சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் நின்று பார்த்து செல்வார்கள். இதனால் அந்த பகுதியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்தது கன்கு பூனை.
இந்த நிலையில் கடந்த16-ந்தேதி அந்த பூனை காணாமல் போனது. காலை 6 மணிக்கு வீட்டில் சுற்றித் திரிந்த தனது பூனை காலை 8 மணிக்கு திடீரென மாயமானதால் சதீஷ் அதிர்ச்சியடைந்தார். இதையடுதது தனது செல்ல பூனையை அவர் தன்னுடைய வீட்டின் சுற்றுப்புற பகுதிகளில் தேடினார்.
பூனையின் ஊனத்தை பயன்படுத்தி தெருநாய்கள் எதுவும் கடித்து கொன்றிருக்கலாம் என்று கருதினார். ஆனால் அவரது வீட்டின் அருகில் அதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லாததால் அந்த பகுதியில் இருந்த கிணறு மற்றும் குழிகளில் பூனையை தேடினார். ஆனால் பூனை கிடைக்க வில்லை.
ஆனவே தனது பூனை காணாமல் போனது குறித்து மன்னுத்தி போலீஸ் நிலையத்தில் சதீஷ் புகார் செய்தார். தன்னுடைய செல்லப்பூனையை கண்டுபிடித்து தருமாறு போலீஸ் அதிகாரியை சந்தித்து கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்கள் யாராவது பார்த்தால் தன்னுடையை பூனை பற்றி தகவல் கொடுப்பார்கள் என்று தனது பூனையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களிலும் சதீஷ் பகிர்ந்துள்ளார்.