வாரணாசி ரெயில் நிலையத்தில் தீ விபத்து.. 200 வாகனங்கள் எரிந்து நாசம் - வீடியோ
- வாரணாசியின் கான்ட் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் [இன்று] சனிக்கிழமை அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது.
- ரயில் நிலையத்தின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
வாரணாசி ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 200 வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் கான்ட் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் இன்று [சனிக்கிழமை] அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்கும் பணியில் 12 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினரும், காவல்துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர். அரசு ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி), ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) குழுக்களும் தீயை அணைக்க உதவினர்.
தீவிரமான அளவு தீ பரவியபோதும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
முதற்கட்ட விசாரணையில், ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கையால், ரயில் நிலையத்தின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.