தமிழர்கள் இந்தி கற்றுக் கொள்ளாதது பெரிய குறை.. ஸ்ரீதர் வேம்பு கருத்துக்கு திமுக பதிலடி!
- தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
- அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவை உறுதி செய்யுமாறு மத்திய அரசிடம் நீங்கள் கோரலாம்.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுப்பதால் கல்விக்கான நிதி மறுக்கப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பின் மறு வடிவம் என தமிழக அரசு வாதிடுகிறது.
இந்நிலையில் தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நமது வணிகத்தின் பெரும்பகுதி டெல்லி, மும்பை மற்றும் குஜராத்திலிருந்து நடைபெறுகிறது. எனவே, வணிக வளர்ச்சிக்கு நாம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இந்தி கற்காதது எங்களுக்கு ஒரு பெரிய குறை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு கருத்துக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உங்கள் வணிகத்திற்கு இந்தி தேவைப்பட்டால் உங்கள் ஊழியர்களுக்கு இந்தி கற்றுக் கொடுங்கள்.
உங்கள் வணிகத்திற்கு இந்தி தேவை என்பதால் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் ஏன் இந்தி படிக்க வேண்டும்?. இதற்கு நேர்மாறாக, அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவை உறுதி செய்யுமாறு மத்திய அரசிடம் நீங்கள் கோரலாம். இது பிரச்சினையைத் தீர்க்கும்.
இந்த வகையினரின் ஒரே பிரச்சனை என்னவென்றால், அவர்கள் மற்றவர்களை விட 'அவர்கள் இரு மடங்கு புத்திசாலிகள்' என்று கற்பனை செய்துகொள்வதுதான். அது பரிதாபத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.