வீடியோ: சாவகாசமாக உட்கார்ந்திருந்தவர்களை திடீரென தாக்கிய குள்ளநரி.. அப்புறம் நடந்த டுவிஸ்ட்..
- சாலையோரத்தில் அமர்ந்திருந்த இருவர் மீது குள்ளநரி பாயும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
- அந்த குள்ளநரி சுமார் 15 அடி தூரம் சென்று கீழே விழுந்தது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் குள்ளநரிகளின் தாக்குதலால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. குள்ளநரி தாக்குதலால் அம்மாநிலத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அந்த வரிசையில் செஹோர் மாவட்டத்தில் இரண்டு பேர் குள்ளநரியால் தாக்கப்பட்டு காயமடைந்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி வீடியோவின் படி, சாலையோரத்தில் அமர்ந்திருந்த இருவர் மீது குள்ளநரி பாயும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
குள்ளநரி தாக்க முற்பட்டதை அடுத்து, அவர்கள் அதன் மீது கற்களை எறிந்து நரியை விரட்ட முயன்றனர். எனினும், அவர்களது முயற்சி தோல்வியடைந்தது. ஆனாலும், இருவரில் ஒருவர் நரியை பிடித்து தூக்கி எறிந்தார். இதில் அந்த குள்ளநரி சுமார் 15 அடி தூரம் சென்று கீழே விழுந்தது.
இந்த சம்பவத்தில் குள்ளநரி தாக்குதலில் காயமடைந்த ஷியாம் யாதவ் மற்றும் நர்மதா பிரசாத் ஆகிய இருவரும் நர்மதாபுரம் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குள்ளநரி தாக்குதலை தொடர்ந்து குடியிருப்பு வாசிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும், தனியாக வெளியே செல்வதைத் தவிர்க்கவும் உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கிராம பஞ்சாயத்து உதவி செயலாளர் ராமகிருஷ்ணா கூறும் போது, "கிராம மக்கள் குள்ளநரிகளை பிடிக்காமல் இருக்கவும், குழுக்களாக பயணம் செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளோம். வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஞ்சர் ஹரிஷ் மகேஸ்வரி காயமடைந்தவர்களை பார்வையிட்டு இழப்பீடு வழங்கினார்" என்றார்.