இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து புனே நகரில் அறிமுகம்
- ஒரு கிலோ மீட்டருக்கு ஆகும் செலவு, டீசல் வாகனங்களை விட குறைவு.
- இது இந்திய சரக்கு சேவையில் புரட்சியை ஏற்படுத்தும்.
முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை மத்திய அறிவியல் மத்திய தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அறிமுகம் செய்து வைத்தார். மலிவான மற்றும் தூய்மையான எரிசக்தியில் இயங்கக் கூடிய வகையில் இந்தப் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மந்திரி ஜிதேந்திர சிங் பேசியதாவது:-
பசுமை ஹைட்ரஜன் ஒரு சிறந்த சுத்தமான ஆற்றல்மிக்க எரிசக்தி ஆகும். இந்த எரிபொருள், ஹைட்ரஜன் மற்றும் காற்றைப் பயன்படுத்தி பேருந்தை இயக்குவதற்கு மின்சாரத்தை உருவாக்குகிறது. பேருந்தில் இருந்து வெளியேறும் ஒரே கழிவு, நீர் என்பதால், இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாக மாறும். நீண்ட தூர வழித்தடங்களில் ஓடும் ஒரு டீசல் பேருந்து பொதுவாக ஆண்டுக்கு 100 டன் கரியமில வாயுவை வெளியிடுகிறது.
இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான டீசல் பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன. லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஆகும் டீசல் செலவுவை விட ஹைட்ரஜன் எரிபொருள் விலை குறைவாக இருக்கும். இது இந்தியாவில் சரக்கு சேவையில் புரட்சியை ஏற்படுத்தும். இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் தொழில்நுட்பத் திறன் உலகிலேயே மிகச் சிறந்ததாக திகழ்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.