கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் தொற்று நோயாக அறிவிப்பு
- தலைநகர் பெங்களூருவில் தான் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.
- டெங்கு பாதிப்புக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 25 ஆயிரத்து 408 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தலைநகர் பெங்களூருவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதாவது நகரில் 11 ஆயிரத்து 590 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த பாதிப்பில் ஏறத்தாழ 50 சதவீதம் தலைநகரிலேயே பதிவாகியுள்ளது.
இந்த டெங்கு பாதிப்புக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடக அரசு, தொற்றுநோய் பரவல் சட்டம்-2020-ன் படி டெங்கு காய்ச்சல் பரவலை தொற்றுநோயாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், குடியிருப்பு கட்டிடங்களில் தண்ணீர் தேங்கி சுகாதாரமற்ற முறையில் இருப்பது தெரியவந்தால் அதன் உாிமையாளருக்கு நகரமாக இருந்தால் ரூ.400, கிராமமாக இருந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள், சுகாதார மையங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், ரெசார்ட், கடைகள், இளநீர் வியாபாரிகள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், பஞ்சர் சரிசெய்யும் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் விதிமீறல் கண்டறியப்பட்டால் அவற்றுக்கு நகரமாக இருந்தால் ரூ.1,000-ம், கிராமமாக இருந்தால் ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும் என்பன உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது.