ஒரே மாதத்தில் 2,870 மாணவர்கள் சளித்தொல்லையால் பாதிப்பு- சிகிச்சையளித்த டாக்டர்களுக்கும் பரவியது
- சளித்தொற்று காற்று மூலம் பரவுகிறது.
- பருவநிலை மாற்றம் காரணமாக பெரியவர்களுக்கும் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த மாதத்தில் இருந்தே அவ்வப்போது மழை பெய்த படி இருக்கிறது. இதனால் அங்குள்ள மாவட்டங்களில் மழைக்கால நோய்கள் பரவின. காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை ஏராளமானோரை பாதித்தது.
அதிலும் பள்ளி குழந்தைகளை சளித்தொல்லை அதிகளவில் பாதித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் கடந்த 10-ந்தேதி 328பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அது நேற்று 2,870 ஆக அதிகரித்தது. டிசம்பர் மாதம் தொடங்கி பாதி நாட்கள் கூட முடியாத நிலையில் சளி தொல்லைக்கு ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பது சுகாதாரத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போதைய இந்த சளித்தொற்று காற்று மூலம் பரவுகிறது. இதனால் சிகிச்சை பெறவருபவர்களிடம் இருந்து டாக்டர்கள் சிலரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரவும் இந்த தொற்று, பருவநிலை மாற்றம் காரணமாக பெரியவர்களுக்கும் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, வயிற்றுவலி, முதுகுவலி, பசியின்மை, தசை-உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், சாதாரண காய்ச்சல் என்று நினைக்காமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.