இந்தியா

கட்சி விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை: குமாரசாமி ஆவேசம்

Published On 2023-01-29 04:03 GMT   |   Update On 2023-01-29 04:03 GMT
  • எங்கள் கட்சியை அழிக்க காங்கிரஸ் தலைவர்கள் கனவு காண்கிறார்கள்.
  • நாட்டில் தற்போது காங்கிரஸ் கட்சி காணாமல் போய் வருகிறது.

ராய்ச்சூர் :

ராய்ச்சூரில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஜனதாதளம் (எஸ்) கட்சி கலைக்கப்பட இருப்பதாகவும், குழப்பத்தில் இருக்கும் தொண்டர்கள் காங்கிரசில் சேரலாம் என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். எங்கள் கட்சியை அழிக்க காங்கிரஸ் தலைவர்கள் கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு மக்கள் முழு ஆதரவு அளிப்பார்கள். எங்கள் கட்சியை தேசிய அளவுக்கு மக்கள் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மக்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, எங்கள் கட்சி 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கூறி இருக்கிறார். எங்களது கட்சியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? என்று காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்கிறேன். நாட்டில் தற்போது காங்கிரஸ் கட்சி காணாமல் போய் வருகிறது. கர்நாடகத்தில் மட்டும் 60, 70 தொகுதிகளில் வெற்றி பெற்று வருகிறார்கள்.

எங்கள் கட்சியை அழிக்க நினைத்தால், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் விடும். 200 யூனிட் இலவச மின்சாரம், ரூ.2 ஆயிரம் உதவித் தொகை என்று மக்களை ஏமாற்றுவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசிக் கொண்டு இருந்தால், சட்டசபை தேர்தலில் கூடுதலாக 4 தொகுதிகள் கிடைக்கும். ஜனதாதளம் (எஸ்) கட்சி பற்றி பேசினால், காங்கிரசுக்கு அந்த தொகுதிகளிலும் கிடைக்காமல் போய் விடும்.

பவானி ரேவண்ணா தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், எனது மகன் போட்டியிடுவது குறித்தும் ஈசுவரப்பா பேசி இருக்கிறார். எனது மகன் மட்டும் தான் தேர்தலில் போட்டியிடுகிறாரா?. சித்தராமையா தனது மகனை எம்.எல்.ஏ. ஆக்கவில்லையா?. ஈசுவரப்பா, எடியூரப்பா தங்களது மகன்களை எம்.எல்.ஏ.க்கள் ஆக்க மறைமுக முயற்சி செய்யவில்லையா?. ஜனதாதளம் (எஸ்) கட்சி விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

Similar News