இந்தியா

அம்பயர் போன்றவர் சபாநாயகர், யார் பக்கமும் சார்ந்து இருக்கக்கூடாது: மல்லிகார்ஜுன கார்கே

Published On 2024-12-14 00:25 GMT   |   Update On 2024-12-14 00:25 GMT
  • சபாநாயகர் யாருடைய பக்கமும் சார்ந்து இருக்கக்கூடாது என்றார்.
  • அவையை ஒத்திவைக்க வேண்டும் என்ற முடிவுடனேயே ஆளுங்கட்சி எம்.பி.க்கள் வருகிறார்கள்.

புதுடெல்லி:

மாநிலங்களவை சபாநாயகர் ஜெகதீப் தன்கர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறி, அவர் மீது இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் கடந்த 10-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.

ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பதற்காக வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்ததாக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, நேற்று மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கருக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. அப்போது பேசிய ஜெகதீப் தன்கர், எனது தந்தை ஒரு விவசாயி. இந்த நாட்டிற்காக எனது உயிரையும் தியாகம் செய்வேன். நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் நீங்கள் அரசியலமைப்பை அவமதிக்கிறீர்கள் என தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த மல்லிகார்ஜுன கார்கே, எனது தந்தையும் விவசாயிதான். உங்களை விட அதிக சவால்களைச் சந்தித்தவன் நான். எங்களுக்கு எதிராகப் பேச பா.ஜ.க. எம்.பி.க்களை நீங்கள் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அவமதிக்கிறீர்கள். விவாதம் நடத்துவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம் என்றார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, சபாநாயகர் ஒரு நடுவர் போன்றவர். அவர் யாருடைய பக்கமும் சார்ந்து இருக்கக்கூடாது. ஜே.பி.நட்டாவிற்கு பேசுவதற்கு 5 முதல் 10 நிமிடங்கள் வரை வழங்கப்படுகிறது. நாங்கள் பேசவேண்டும் என்று கையை உயர்த்தினால் எங்கள் மைக் ஆப் செய்யப்படுகிறது. அவையை ஒத்திவைக்க வேண்டும் என்ற முடிவுடனேயே ஆளுங்கட்சி எம்.பி.க்கள் வருகிறார்கள். எனது சுயமரியாதை மற்றும் அரசியலமைப்பு உரிமைக்காக நான் தொடர்ந்து போராடுவேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News