இந்தியா

இந்தியர்களின் விருப்பமான உணவு, கேக் தலைநகரம்... ஸ்விக்கியில் சுவாரஸ்யம்

Published On 2023-12-16 08:51 GMT   |   Update On 2023-12-16 12:29 GMT
  • சொமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இச்சேவையில் முன்னணியில் உள்ளன
  • இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியின் போது மிக அதிகளவில் ஆர்டர்கள் செய்துள்ளனர்

கடந்த சில வருடங்களாக உணவிற்காக வசிப்பிடத்தை விட்டு வெளியே சென்று உணவகங்களை தேடுவதற்கு பதிலாக இணையதளத்தில் உள்ள செயலிகளின் மூலம் விருப்பமான உணவகங்களிலிருந்து விலைகளை ஒப்பிட்டு பார்த்து தங்களுக்கு பிடித்தமான உணவுகளை இருக்கும் இடத்திற்கே தருவிப்பது இந்தியர்களிடையே பிரபலமாகி வருகிறது.

சொமேட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy) உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையில் முன்னணியில் உள்ளன.

ஆண்டுதோறும், ஸ்விக்கி நிறுவனம் தங்கள் செயலியின் மூலம் பெரும்பான்மையானோர் தருவிக்கும் உணவு வகைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

இதில் தொடர்ச்சியாக 8-வது ஆண்டாக முதலிடத்தை "பிரியாணி" பிடித்துள்ளது.


இந்த தரவுகளின்படி ஒவ்வொரு 2.5 வினாடிகளில் இந்தியர்களால் ஒரு பிரியாணி ஆர்டர் செய்யப்படுகிறது. அதிலும் சைவ பிரியாணியோடு ஒப்பிட்டால் சிக்கன் பிரியாணியின் விகிதாசாரம் 1 : 5.5 எனும் அளவில் உள்ளது.

ஸ்விக்கி செயலியின் தளத்தில் 40,30,827 முறை "பிரியாணி" அதிகம் தேடப்பட்ட சொல்லாக உள்ளது. ஐதராபாத் நகரில்தான் பிரியாணி ஆர்டர்கள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. அந்நகரத்தில் ஒரே நபர் இந்த ஒரே வருடத்தில் 1633 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளார்.

ஐசிசி 2023 ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது சண்டிகர் நகரில் ஒரு குடும்பம் ஒரே முறையில் 70 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளது. விறுவிறுப்பான அப்போட்டி நடைபெற்ற தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 250 ஆர்டர்கள் எனும் விகிதத்தில் மக்கள் ஸ்விக்கியில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர்.

ஸ்விக்கியின் தரவுகளின்படி கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரூ மக்கள்தான் அதிகளவில் கேக் ஆர்டர் செய்துள்ளனர். 8.5 மில்லியன் ஆர்டர்கள் செய்ததால் இந்நகர் "கேக் தலைநகரம்" (cake capital) என அழைக்கப்படுகிறது.

பிப்ரவரி 14, வேலண்டைன் தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 271 கேக்குகள் எனும் விகிதத்தில் ஆர்டர்கள் குவிந்தன. நாக்பூர் நகரில் ஒரு உணவு விரும்பி, ஒரே நாளில் 92 கேக்குகளை ஆர்டர் செய்துள்ளார்.


பிரியாணியையும், கேக்குகளையும் தவிர, மும்பை நகரை சேர்ந்த ஒருவர் 42.3 லட்சம் பெருமான உணவு ஆர்டர்களை செய்திருந்தது இந்த தரவுகளில் உள்ள வியக்க வைக்கும் மற்றொரு தகவல்.

அதே போல் ஒடிஸா மாநில தலைநகர் புபனேஸ்வரில் ஒரு வீட்டில் ஒரே நாளில் 207 பீஸாக்களை ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News