இந்தியா

ஆந்திராவில் வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற எம்.பி.யின் உதவியாளர்- பணத்தகராறில் விபரீதம்

Published On 2023-03-29 05:52 GMT   |   Update On 2023-03-29 05:52 GMT
  • துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடப்பா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திலிப் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
  • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவேந்தலாவை சேர்ந்தவர் அவினாஷ். இவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம். பி. ஆக உள்ளார்.

இவரது உதவியாளராக இருப்பவர் பாரத் குமார் யாதவ். இவர் கடப்பா மாவட்டத்தில் சூதாட்டம் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட இடங்களில் பணம் வசூல் செய்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த திலீப் குமார் என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் திருமண செலவுக்காகபாரத் குமாரிடம் பணம் வாங்கி உள்ளார். திலிப் குமார் வாங்கிய பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் வெளியே சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு திலிப் குமார் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் கொடுத்த கடனை திருப்பி தருவது தொடர்பாக அதிரடி மகபூப் பாஷா என்பவர் முன்னிலையில் திலீப் குமாரும் பாரத்குமாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பாரத் குமார் வீட்டிற்கு சென்று துப்பாக்கி எடுத்து வந்து திலீப்குமார் மற்றும் மகபூப் பாஷாவை நோக்கி 3 ரவுண்டு சுட்டார். இதில் திலீப் குமார் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

மகபூப் பாஷாவுக்கு கை மற்றும் காலில் குண்டு பாய்ந்தது.

அவரை மீட்டு சிகிச்சைக்காக கடப்பா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடப்பா போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திலிப் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாரத் குமார் யாதவை கைது செய்தனர்.

பாரத் குமார் அவினாஷ் எம்.பி யின் உதவியாளராக இருந்ததால் அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது லைசன்ஸ் வாங்கிக் கொடுத்தது யார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News