நவ்நீத் ரானா எம்.பி.க்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு: மும்பை கோர்ட்டு
- நவ்நீத் ரானா மீது போலி சான்றிதழ் பெற்றதாக வழக்குப்பதிவு.
- அவரது சாதி சான்றிதழை கடந்த ஆண்டு மும்பை ஐகோர்ட்டு ரத்து செய்தது.
மும்பை
மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி.யாக இருப்பவர் நவ்நீத் ரானா. நடிகையான இவர் தமிழ் படமான அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடித்துளளார்.
இவர் தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியில் போட்டியிட போலி சான்றிதழ் பெற்றதாக மும்பை முல்லுண்டு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.
ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு வந்தபோது நவ்நீத் ரானா மற்றும் அவரது தந்தை ஆஜராகவில்லை. எனவே அவர்களுக்கு எதிராக கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் பிடிவாரண்டு் பிறப்பித்து இருந்தது.
இந்தநிலையில் நேற்று வழக்கு மீதான விசாரணையின் போது, நவ்நீத் ரானாவுக்கு எதிரான பிடிவாரண்டை செயல்படுத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என போலீசார் கேட்டனர். இதை நிராகரித்த மாஜிஸ்திரேட்டு மோகாஷி, நவ்நீத் ரானா மற்றும் அவரது தந்தைக்கு எதிராக புதிதாக ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்தார். மேலும் பிடிவாரண்டு உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். பின்னர் வழக்கு மீதான விசாரணையை வரும் 28-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
நவ்நீத் ரானா போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து சாதி சான்றிதழ் வாங்கியதாக கூறி அவரது சாதி சான்றிதழை கடந்த ஆண்டு மும்பை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை எதிர்த்து நவ்நீத் ரானா சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.