வீல் ஸ்ட்ரெச்சர்ஸ் மூலம் தொழிலாளர்களை வெளியே கொண்டு வர திட்டம்: என்.டி.ஆர்.எஃப். ஜெனரல்
- சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
- 9 மீட்டர் தூரம் இருக்கும் நிலையில், துளையிடும் வழியில் கான்கிரீட் தடையை ஏற்படுத்தியதால் தாமதம்.
41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கப்பாதையில் மாற்று பாதை அமைத்து, அவர்களை மீட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 95 சதவீதம் பணி முடிவடைந்து, விரைவில் அவர்களை மீட்கும் பணி தொடங்கப்போகிறது.
அவர்கள் எவ்வாறு வெளியே கொண்டு வரப்பாடுவார்கள் என்பது குறித்து தேசிய பேரிடர் மீட்புப்படை ஜெனரல் அதுல் கர்வால் கூறியதாவது:-
தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழாய் மூலம் உள்ளே செல்வார்கள். அவர்கள் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை அடைந்ததும், அவர்கள் கொண்டு சென்றுள்ள பொருட்கள் மூலம், தொழிலாளர்களை ஒருவர் பின் ஒருவராக வெளியே அனுப்பி வைப்பார்கள்.
உயரம் குறைவாக உள்ள தொழிலாளர்கள் வீல் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்டு, என்டிஆர்எஃப் வீரர்கள் மூலம் ரோப் கட்டி இழுக்கப்படுவார்கள்.
அதற்கு முன்னதாக, 800 மி.மீ. விட்டம் குழாய் கொண்ட மீட்பு குழு தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழு வீரர்களால் சுத்தம் (துளையில் இறக்கும்போது, வெல்டிங் வைக்கும்போது துகள் சிக்கியிருந்தால்) செய்யப்படும். இது ஸ்டெச்சர் செல்லும் வழியில் எந்த பொருட்களும் தடையை ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்து கொள்ளும்.
800 மி.மீ. குழாய்கள் ஏறக்குறைய 32 இன்ச் அகலம் கொண்டது. இது போதுமானது. 22 முதல் 24 இன்ச் அகலம் கிடைத்தால் கூட, எங்களால் அவர்களை வெளியே இழுக்க முடியும்.
இவ்வாறு அதுல் கர்வால் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு வரை நடைபெற்ற மீட்புப்பணி விவரங்கள்
மீட்க பேரிடர் மீட்பு படையினரும், மீட்பு குழுவினரும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இன்று 12-வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது. மீட்பு பணிகளில் பல்வேறு சவால்களை சந்தித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாகவே மீட்பு பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் சுரங்கத்துக்குள் சிறுதுளை வழியாக எண்டாஸ்கோபி கேமரா செலுத்தும் பணி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த எண்டோஸ்கோபி கேமரா டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் வரவழைக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து 41 தொழிலாளர்களும் நல்ல நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அந்த கேமரா மூலம் 41 தொழிலாளர்களையும் வெளியில் இருக்கும் மீட்பு குழுவினர் உள்பட அனைவருமே பார்த்தனர். அந்த வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன.
இதையடுத்து, சுரங்கத்துக்குள் செலுத்தப்பட்ட 6 அங்குல குழாய் மூலம் தொழிலாளர்களுக்கு சூடான உணவுகள் நேற்று முன்தினம் முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
சுரங்கப்பாதைக்குள் 'ஆகர்' என்ற எந்திரம் மூலம் 51 மீட்டர் தூரத்துக்கு துளையிடும் பணி முடிந்துவிட்டது. தொழிலாளர்கள் 57 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளனர். இன்னும் 6 மீட்டர் ஆழம் குழி தோண்டினால் சுரங்கப்பாதைக்குள் குழாய் மூலமாக வழி ஏற்படுத்திவிடலாம்.
இதற்காக இரும்பு குழாய்கள் வெல்டிங் செய்யப்பட்டு, தோண்டப்பட்ட துளைக்குள் இறக்கப்படுகின்றன. இந்த குழாய்களை வெல்டிங் செய்வது முக்கியமான பணி என்பதால் இதற்கு தாமதம் ஆனது. மேலும் 18 மீட்டர் குழாய் 3 பிரிவுகளாக உள்ளே இறக்கப்பட்டுள்ளது.
48 மீட்டருக்கு மேல் துளையிட்ட நிலையில் வெறும் 9 மீட்டர் இருக்கும்போது நடுவில் கான்கிரீட் ஒன்று தடுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கான்கிரீட்டின் நடுவில் 16 மி.மீ முதல் 20 மி.மீ அளவு உள்ள கம்பிகள் குறுக்கே இருக்கிறது. அந்த கம்பிகளை அறுத்து எடுப்பது மிகவும் சவாலான பணியாக உள்ளது. அந்த கம்பியை அறுக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதையடுத்து சுரங்கப்பாதை திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தின் ஊழியர்கள் அனுப்பப்பட்டு கம்பியை அறுக்கும் பணியை மேற்கொண்டனர். அவர்கள் மூலம் கம்பிகளை அறுத்து அகற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த கம்பிகளை அறுக்கும் பணி கடுமையான போர் நடப்பதற்கு நிகரான சவாலான பணியாக உள்ளது. கம்பியை அறுத்து அகற்றும் பணி நடந்து வரும் நிலையில் தற்போது 'ஆகர்' எந்திரத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
கான்கிரீட்டில் உள்ள கம்பியை அறுத்து எடுத்ததும் அதை மீண்டும் வெல்டிங் செய்து பாலிஷ் செய்ய வேண்டும். இதற்காக வெல்டிங் செய்வதில் திறன் வாய்ந்த நிபுணர்கள் 5 பேர் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் வரவழைக்கப்பட்டனர். கம்பியை அறுத்து முடிந்ததும் அவர்கள் வெல்டிங் செய்து பாலிஷ் செய்வார்கள். இந்த பணிகள் முடிந்து விட்டால் அதன் பிறகு உடனடியாக துளையிட்டு 41 தொழிலாளர்களையும் எளிதாக மீட்டு விடலாம்.
எனவே 41 தொழிலாளர்களையும் மீட்பதற்கான இறுதிகட்ட முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். முதலில் இன்று பிற்பகல் அல்லது மாலைக்குள் 41 பேரும் மீட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கான்கிரீட் கம்பிகளை அறுத்து அகற்றுவது மீட்பு குழுவினர் எதிர்பார்த்ததை விட சவால் நிறைந்த பணியாக இருந்தது.
எனவே கம்பிகளை அறுத்து அகற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இன்று பகலில் கான்கிரீட் இரும்பு கம்பி அறுத்து அகற்றப்பட்டது. அதன்பிறகு சுரங்கப் பாதைக்குள் 800 மி.மீ விட்டம் கொண்ட குழாய் இறக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. இதனால் மீட்பு பணி நிறைவடைய இன்று இரவாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மீட்பு குழு அதிகாரியும், பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் ஆலோசகருமான பாஸ்கர் குல்பே இன்று மதியம் கூறுகையில், 'மீட்பு பணி முடிவடைய இன்னும் 12 முதல் 14 மணி நேரம் ஆகும். அதன் பிறகு தொழிலாளர்களை ஒவ்வொருவராக வெளியே கொண்டு வர கூடுதலாக 3 மணி நேரம் தேவைப்படும்.
கான்கிரீட் கம்பி குறுக்கிட்டதால் இடையில் துளையிடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கான்கிரீட் கம்பியை அறுத்து அகற்றிய பிறகு துளையிடும் பணி மீண்டும் தொடங்கியது. எனவே இன்று இரவுக்குள் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள்' என் றார்.
மேலும் மீட்பு பணியில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகம் உள்பட அரசின் 5 நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. தொழிலாளர்கள் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன், குடிநீர் போதிய அளவில் உள்ளது. சுரங்கப் பாதைக் குள் மண் சரிவு ஏற்பட்ட போதும், மின்தடை ஏதும் ஏற்படவில்லை. சுரங்கப் பாதைக்குள் மின்னொளி வெளிச்சமும் நன்றாக உள்ளது.
இதற்கிடையே தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் தேவைப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க 8 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை, சுரங்கப்பாதைக்கு அருகே உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு 15 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 41 ஆம்புலன்ஸ் வாகனங்களும், ஒரு ஹெலிகாப்டரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இன்று காலையில் மருத்துவர்கள் குழுவினர் சுரங்கப்பாதைக்குள் சென்றனர். ஆம்புலன்சில் இருந்து சில மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் உள்ளே சென்றுள்ளனர். டாக்டர்களுடன், நர்சுகளும் சுரங்கப்பாதைக்குள் சென்றுள்ளனர். அவர்கள் 41 தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டு பேசி அவர்களின் உடல்நிலை பற்றி அறியவும் உள்ளே சென்றனர்.
மேலும் 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்ட பிறகு அவர்களை மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்சில் ஏற்ற சுரங்கப்பாதைக்குள் 300 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். எனவே ஆம்புலன்சுகளை சுரங்கப்பாதைக்குள் கொண்டு சென்று தொழிலாளர்களை ஏற்றி வர வழி உள்ளதா என்று மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர்.
தற்போதைய நிலையில் ஒரு ஆம்புலன்ஸ் உள்ளே சென்று ஒரு தொழிலாளியை ஏற்றி வந்த பிறகு, ஒவ்வொரு ஆம்புலன்சாக உள்ளே சென்று அனைத்து தொழிலாளர்களையும் வெளியே கொண்டு வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மீட்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், 41 தொழிலாளர்களின் குடும்பத்தினரும் உத்தரகாசிக்கு வரவழைக்கப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, மத்திய மந்திரி வி.கே.சிங் ஆகியோர் உத்தரகாசி விரைந்தனர். 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ள சுரங்கப்பாதை பகுதிக்கு சென்ற அவர்கள் மீட்பு பணியை பார்வையிட்டனர்.