இந்தியா

இந்தியாவின் எந்தப் பகுதியையும் பாகிஸ்தான் என யாரும் கூறக்கூடாது: தலைமை நீதிபதி கண்டிப்பு

Published On 2024-09-25 08:08 GMT   |   Update On 2024-09-25 08:16 GMT
  • பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான என அழைத்தது சர்ச்சையானது.
  • ஐகோர்ட் நீதிபதிக்கு கருத்து கட்டுப்பாடு தேவை. இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

புதுடெல்லி:

கர்நாடக மாநில ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீஷானந்தா, நில உரிமையாளருக்கும், குத்ததைதாரருக்கும் இடையிலான பிரச்சனை தொடர்பான வழக்கில் பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியை பாகிஸ்தான என அழைத்தார். இது மிகவும் சர்ச்சையானது.

இதுதொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது ஐகோர்ட் நீதிபதிக்கு கருத்து கட்டுப்பாடு தேவை. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டது. இரு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிமன்றம் அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது

 

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்யகாந்த், ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

அப்போது தலைமை நீதிபதி கூறும்போது, நீதித்துறை நடவடிக்கைகளின்போது, பெண் வெறுப்பு அல்லது சமூகத்தின் எந்தப் பிரிவினருக்கும் பாதகமானதாகக் கருதப்படும் கருத்துக்களை வெளியிடாமல் கோர்ட்டுகள் கவனமாக இருக்கவேண்டும்.

நாட்டில் உள்ள பெரும்பாலான கோர்ட்டுகள் தற்போது வழக்கு விசாரணையை நேரலை செய்து வருகின்றன. இந்த நேரலை என்பது மக்கள் மத்தியில் நேரடியாக செல்பவை என்பதை நீதிபதிகள், வக்கீல்கள், நீதித்துறையினர் மனதில் கொள்ள வேண்டும்.

எனவே எந்தக் கருத்தையும் கூறுவதற்கு முன் இதனை மனதில் வைத்திருக்க வேண்டும். நீதிபதியின் இதயம், மனசாட்சியும் பார பட்சமற்றதாக இருந்தால் மட்டுமே நீதியை வழங்கமுடியும். நீதித்துறையில் முடிவெடுப்பதற்கு வழிகாட்டு மதிப்புகள் மட்டுமே அரசியலமைப்பில் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நீதித்துறையின் அனைத்துத் தரப்பினரும் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். எனவே இந்தியாவின் எந்தப் பகுதியையும் பாகிஸ்தான் என்று யாரும் அழைக்கவேண்டாம். இது தேச

ஒருமைப்பாட்டிற்கு எதிரானது.

நீதி என்பது சூரிய ஒளி போன்று பிரகாசமானது. அது மேலும் பிரகாசமானதாக இருக்கவேண்டும். அதனடிப்படையில் கோர்ட்டில் நடப்பதையும் வெளிச்சத்தில் கொண்டு வர வேண்டுமே தவிர, மூடி மறைக்கக் கூடாது என்பதே ஆகும் என்றார்.

மேலும், தான் தெரிவித்த கருத்துக்களுக்காக கர்நாடக நீதிபதி, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளதால் இவ்வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News