மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதில் தவறு இல்லை- கர்நாடக எம்.பி. பேச்சால் சர்ச்சை
- ஜப்பானில் மாணவர்களும், ஆசிரியர்களும் கழிவறையை சுத்தம் செய்கிறார்கள்.
- குழந்தைகளுக்கு தூய்மையைப் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.
கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும், சித்ரதுர்கா தொகுதி எம்.பி.யுமான கோவிந்த் கர்ஜோல், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது பள்ளியில் மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்தால் என்ன தவறு? எனப் பேசினார். அவரது பேச்சு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் கோவிந்த் கஜ்ரோல் எம்.பி. பேசும்போது கூறியதாவது:-
பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்தால் அதில் என்ன தவறு இருக்கிறது?. ஜப்பானில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.
ஆசிரியர்கள் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வது, இதனால் ஆசியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வீடியோக்களை நாம் பார்த்திருக்கிறோம். மாணவர்களுக்கு துடைப்பம் கொடுப்பது குற்றமாக பார்க்கப்படுவதால், துப்புரவு பணியே தரம் தாழ்ந்ததாக மாணவர்கள் கருதுகின்றனர். மாறாக, குழந்தைகளுக்கு தூய்மையைப் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.
கோவிந்த் கஜ்ரோல் கருத்து குறிதது கல்லூரி முன்னாள் பேராசிரியர் ஒருவர் கூறுகையில் "மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அங்கு பாகுபாடு பார்க்கக் கூடாது. சுழற்சி முறையில் சுத்தம் செய்யும் பணியை தொடர வேண்டும். ஐந்தாம் வகுப்பிற்குமேல் படிக்கும் மாணவர்கள் இதில் ஈடுபடுத்தப்பட வேண்டும். சரியான தண்ணீர் வசதி பெற்றிருக்க வேண்டும்" என்றார்.
மற்றொரு கல்வியாளர் கூறுகையில் "கர்ஜோல் கருத்து விசித்திரமானதாக உள்ளது. மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என சொல்வது எளிதானது. இறுதியாக இது தலித்த குழந்தைகள் மீது விழும். மாணவர்கள் செய்ய வேண்டியதைச் செய்யக்கூடிய வகையில் அடிப்படை வசதிகளுடன் கூடிய பள்ளிகளை அரசு வழங்க வேண்டும்." என்றார்.
பல்வேறு மாநிலங்களில் மாணவர்களை தூய்மை பணிகள் உள்ளிட்ட போன்றவற்றில் ஈடுபடுத்தக் கூடாது என வழிநாட்டு நெறிமுறைகள் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.