ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா 'டிசம்பர் 16' மக்களவையில் தாக்கல்..
- மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன
- திட்டத்தை அமல்படுத்த குறைந்த பட்சம் ஆறு மசோதாக்களை திருத்தம் செய்ய வேண்டும்.
இந்தியாவில் மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தி முடித்திட மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை முன்மொழிந்தது.
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்த குழு ஒரு நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதாவை இந்த கூட்டத் தொடரிலேயே பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
அதன்படி வரும் டிசம்பர் 16 ஆம் தேதி [திங்கள்கிழமை] மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் அதனை தாக்கல் செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த குறைந்த பட்சம் ஆறு மசோதாக்களை திருத்தம் செய்ய வேண்டும். இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரு அவைகளிலும் கூட்டணி கட்சிகளுடன் மெஜாரிட்டி உள்ளது. ஆனால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உள்ளதா? என்பது கேள்விக்குறியானது.
245 இடங்களை கொண்ட மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 112 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு 85 இடங்கள் உள்ளன. அரசுக்கு 164 வாக்குகள் தேவை.
மக்களவையில் 545 இடங்களில் 292 இடங்கள் உள்ளன. மூன்றில் இரண்டு பங்கிற்கு 364 வாக்குகள் தேவை. ஆனால் வாக்கு நடத்தப்படும் வீதம் மாறுபடும். அப்போதைய நிலையில் எவ்வளவு உறுப்பினர்கள் அவைக்குள் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.