உ.பி.யில் 185 வருட பழமையான மசூதியின் ஒரு பகுதி இடிப்பு: ஆக்கிரமிப்பு என காரணம் கூறிய அதிகாரிகள்
- நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்கு இடையூறாக இருந்த நூரி மசூதியின் சுமார் 20 மீட்டர் கட்டடப் பகுதிகள் இடிப்பு.
- மசூதி 1839-ல் கட்டப்பட்டது. அப்பகுதியில் சாலை போடப்பட்டது 1956-ல் எனத் தெரிவித்தது மசூதி நிர்வாகம்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 185 வருட பழமையான மசூதியின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் இடிக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் ஃபதேபூரில் உள்ள பண்டா-பஹ்ரைச் தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த மசூதி உள்ளது. இந்த மசூதியின் ஒருபகுதி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் ஆக்கிரமித்து கட்டப்பட்ட பகுதி இடிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் புல்டோசர் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
செயற்கைக்கோள் மற்றும் மசூதியின் வரலாற்றுப் படங்களை மேற்கொள் காட்டி கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இந்த கட்டடம் ஆக்கிரமித்து கட்டப்பட்டது என மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி பொதுப்பணித்துறையால், இந்த பகுதியை இடிப்பதற்கு அதிகாரிகளால் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
பொதுப்பணித்துறையால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஒருமாதம் காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. அதை பின்பற்ற அவர்கள் உறுதி அளித்தனர். ஆனால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பண்டா-பஹ்ரைச் நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்கு இடையூறாக இருந்த நூரி மசூதியின் சுமார் 20 மீட்டர் கட்டடப் பகுதிகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.
லலாவுலி நூரி மசூதி 1839-ம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த பகுதியில் சாலை 1956-ல் போடப்பட்டது. இருப்பினும், மசூதியின் சில பகுதிகள் சட்டவிரோதம் என பொதுப்பணித்துறை கூறுகிறது என மசூதியின் நிர்வாக கமிட்டி தெரிவித்துள்ளது.
அதேவேளையில் மாவட்ட கூடுதல் கலெக்டர் "ஆகஸ்ட் மாதம் மசூதி நிர்வாகம் உள்பட 139 நிறுவனங்களுக்கு (நில உரிமையாளர்கள்) நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பகுதியை நீக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சாலை சரிசெய்யும் மணி, பாதாள சாக்கடை திட்டம் கட்டுமான பணிக்காக இந்த இடம் பரிந்துரை செய்யப்பட்டது. அதனடிப்படையில் நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்பு பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது" என்றார்.
கடந்த காலங்களில் மாவட்ட நிர்வாகம் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் முறையாக தெரிவித்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.