இந்தியா

பிரதமர் மோடி

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க காத்திருக்கிறேன் - பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2022-11-18 18:52 GMT   |   Update On 2022-11-18 18:52 GMT
  • தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
  • காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாசார தொடர்பை புதுப்பிக்கும் நோக்கத்தில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வுடனும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் காசி-தமிழ் சங்கமம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கி அடுத்த மாதம் 16-ம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு நடக்கிறது.

காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான பல நூற்றாண்டு கால பழமையான நாகரீக தொடர்பை மீண்டும் உயிர்ப்பிக்க இதில் கருத்தரங்குகள், கல்வி சார்ந்த உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 2, 592 பேர் பயணம் செய்கிறார்கள். முதலாவது ரெயில் நேற்று முன்தினம் புறப்பட்டது.

இதற்கிடையே, காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) முறைப்படி தொடங்கி வைக்கிறார். வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் தொடக்க விழா நடக்கிறது.

இந்நிலையில், காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க தான் காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவின் கலாச்சார தொடர்புகளையும் அழகிய தமிழ் மொழியையும் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியான காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க வாரணாசிக்கு வருகை தர ஆவலுடன் காத்திருக்கிறேன் என தமிழில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News