இந்தியா

ஷாருக்கான் மகனை போதை வழக்கில் விடுவிக்க ரூ.25 கோடி லஞ்சமா?: ஐ.ஆர்.எஸ். அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்கு

Published On 2023-05-13 04:04 GMT   |   Update On 2023-05-13 04:04 GMT
  • ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
  • ரூ.50 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ.க்கு தகவல் போனது.

புதுடெல்லி :

மும்பையில் இருந்து கோவா நோக்கி கடந்த 2021-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2-ந்தேதி புறப்பட்டுச்சென்ற கார்டெலியா என்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் கூடிய விருந்து நடைபெறுவதாகவும், அதில் பலர் கலந்து கொண்டிருப்பதாகவும் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு படை அதிகாரிகள் அதிரடியாக அந்த கப்பலில் சோதனை நடத்தினர். இதில் போதைப்பொருள் பயன்படுத்தி பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் (வயது 25) உள்ளிட்டோர் பிடிபட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகையில் ஆர்யன்கான் குற்றமற்றவர் என கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர்வான்கடே தலைமையில் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையினர் நடத்திய விசாரணையில் பல குறைபாடுகளை, போதைப்பொருள் தடுப்பு படையின் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) கண்டுபிடித்தது.

மேலும், ஆர்யன்கானை வழக்கில் இருந்து தப்பிவிக்க சமீர் வான்கடேயும், அவரது சக அதிகாரிகளும் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாகவும் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் தெரியவந்தது.

இதில் அவர்களுக்கு ரூ.50 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ.க்கு தகவல் போனது.

இதன் பேரில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. மேலும், மும்பை, டெல்லி, ராஞ்சி, கான்பூர் என 29 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர்.

இந்த சோதனையில் என்ன பிடிபட்டது என்பது தெரியவரவில்லை.

சமீர் வான்கடே, கடந்த ஆண்டு மே மாதம் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையில் இருந்து சென்னையில் வரி செலுத்துவோர் சேவைகள் பிரிவின் தலைமை இயக்குனராக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News