சல்மான் கான் வீடு அருகே துப்பாக்கிசூடு- கைதான நபர் தற்கொலை
- துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
- மும்பை சிறப்பு பிரிவு போலீசாரின் காவலில் இருந்த அனுஜ்தாபன் தற்கொலை.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகரான சல்மான் கான் வீடு மும்பை பாந்த்ராவில் அமைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி அன்று அதிகாலை ஐந்து மணியளவில் இவரது வீட்டு முன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு உடனடியாக வீட்டில் இருந்த காவலாளிகள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இதுதொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களை மும்பை குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அனுஜ் தாபன் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பதாக மும்பை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், விசாரணைக்காக மும்பை சிறப்பு பிரிவு போலீசாரின் காவலில் இருந்த அனுஜ்தாபன் தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவர், கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அனுஜ் தாபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.