பாதுகாப்பை மீறி முதல்வரை நோக்கி ஓடிய நபர்.. கர்நாடகாவில் பரபரப்பு - வீடியோ
- கூட்டத்தில் அமர்ந்திருந்த நபர் திடீரென மேடையை நோக்கி ஓடினார்.
- மேடை அருகே சென்றதும் முதல்வர் சித்தராமையாவை நோக்கி ஓட முயன்றார்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஜனநாயக தினம் கொண்டாட்ட விழா நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள விதான் சவுதா முன்பு இந்த நடந்தது. இதற்கான நிகழ்ச்சியில் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மகாதேவப்பா மேடையில் பேசி கொண்டிருந்தார். இதே மேடையில் முதல்வர் சித்தராமையா இருக்கையில் அமர்ந்து இருந்தார். அப்போது கூட்டத்தில் முன் பார்வையாளர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் திடீரென மேடையை நோக்கி ஓடினார்.
மேடை அருகே சென்றதும் முதல்வர் சித்தராமையாவை நோக்கி ஓட முயன்றார். இதை கவனித்த பாதுகாவலர்கள் உடனடியாக அந்த நபரை தடுத்தனர். பிறகு பாதுகாவலர்கள் அந்த நபரை குண்டுகட்டாக இழுத்து சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பை மீறி நபர் ஒருவர் சித்தராமையாவை நோக்கி ஓடிய சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. எனினும் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், அவரது பெயர் மகாதேவ் நாயக் என்பதும், அவர் முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர் என்றும் தெரியவந்துள்ளது. முதலமைச்சருக்கு சால்வை அணிவிக்கும் முயற்சியில்தான், அவரை அணுக முயற்சி செய்தாக அந்த நபர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.