'சர்தார்ஜி' ஜோக்குகளுக்கு தடை விதிக்கும் உச்சநீதிமன்றம்?.. காரணம் இதுதான்
- சீக்கியர்களை குறைந்த அறிவுத்திறன் கொண்டவர்கள், முட்டாள்கள் என்று சித்தரிக்கின்றன
- பள்ளியில் சீக்கிய அடையாளத்துக்காகக் கேலி செய்யப்பட்ட சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை குறிப்பிட்டார்
சர்தார்ஜி ஜோக்குகள் என்பது இந்தியா முழுவதிலும் பிரபலமான ஒன்றாக உள்ளது. சீக்கிய மதத்தை பின்பற்றும் குறிப்பாக பஞ்சாபி மற்றும் அரியானா ஆண்கள் சர்தார்ஜி என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களை முன்னிறுத்தி கூறப்படும் ஜோக்குகள் சர்தார்ஜி ஜோக்குகள் எனப்படும்.
வெகு காலமாவே மக்கள் மத்தியில் புழங்கி வரும் இந்த ஜோக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக சில சர்தார்ஜி ஜோக்குகள் மனதை புண்படுத்தும் வகையாக அமைந்துவிடுகிறது. எனவே இந்த முறையற்ற சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க கோரி சீக்கிய வழக்கறிஞர் ஹர்விந்தர் சௌத்ரி கடந்த 2015 தாக்கல் பொது நல வழக்கு (பிஐஎல்) தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பூஷன் ஆர் கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது பேசிய வழக்கறிஞர் ஹர்விந்தர் சௌத்ரி, இத்தகைய நகைச்சுவைகள் சீக்கியர்களை குறைந்த அறிவுத்திறன் கொண்டவர்கள், முட்டாள்கள் என்று சித்தரிக்கின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களின் உடைக்காக கேலி செய்யப்படுகின்றனர், சீக்கிய குழந்தைகள் பள்ளி தோழர்களால் கேலி செய்யப்படுகின்றனர். நகைச்சுவைகள் அடிப்படை சிந்தனையையே மாற்றியமைக்கிறது. இந்த நகைச்சுவைகள் மனித மனதை பாதிக்கின்றன என்று அவர் கூறினார்.
மேலும் பள்ளியில் சீக்கிய அடையாளத்துக்காகக் கேலி செய்யப்பட்ட சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையும் சவுத்ரி எடுத்துக்காட்டினார். சமூகத்திற்கு இந்த ஸ்டீரியோடைப்கள் ஏற்படுத்தும் தீங்குகளை மேற்கோள் காட்டி, டிஜிட்டல் தளங்களில் புண்படுத்தும் உள்ளடக்கத்தை கொண்ட இந்த ஜோக்குகள் கையாளப்படுவதைத் தடுக்க அரசுக்கு உத்தரவிடுமாறு சௌத்ரி தெரிவித்தார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், இது ஒரு முக்கியமான பிரச்சினை, சீக்கிய சமூகத்தை குறிவைத்து பரவி வரும் புண்படுத்தும் நகைச்சுவைகளைப் பற்றியும், இதை கட்டுப்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகளைக் குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பாக பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு குறித்த மேலதிக விசாரணையை 8 வாரங்களுக்குப் பிறகு ஒத்தி வைத்தனர்.