மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் போர் விமானங்கள் விழுந்து நொறுங்கி விபத்து
- சுகோய்-30 நிராஜ்-2000 ரக விமானங்கள் மொரீனா என்ற பகுதியில் விழுந்து நொறுங்கின.
- ராஜஸ்தானிலும் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இன்று அதிகாலை சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 ஆகிய இரண்டு போர் விமானங்கள் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றன.
நடுவானில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இரண்டு விமானங்களும் திடீரென்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.
இரண்டு விமானங்களும் மொரேனா என்ற பகுதியில் கீழே விழுந்தது. இதில் விமானங்கள் முழுவதும் நொறுங்கி தீப்பிடித்தது. விமானங்கள் விழுந்ததால் ஏற்பட்ட பயங்கர சத்தத்தை கேட்டு பொதுமக்கள் அங்கு வந்தனர். விமானங்கள் நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் விமானப்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விமானங்கள் விழுந்து கிடந்த பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
விமானங்களின் பாகங்கள் வேறு பகுதியில் விழுந்து கிடக்கிறதா என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சுகோய்-30, மிராஜ்-2000 ஆகிய இரண்டு போர் விமானங்கள் விபத்தில் சிக்கியதை உறுதிப்படுத்திய பாதுகாப்புத்துறை விபத்து நடந்த பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தது.
விமானங்கள் மோதுவதற்கு முன்பே விமானிகள் இருவரும் தங்களது விமானங்களில் இருந்து பாராசூட் மூலம் வெளியேறினர். அவர் களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து மொரேனா மாவட்ட கலெக்டர் அங்கித் அஸ்தானா கூறும்போது, "விமானங்களில் இருந்து வெளியேறிய விமானிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் காயம்அடைந்து உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
மீட்பு பணியில் போலீசார் மற்றும் உள்ளூர் நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது" என்றார்.
கடும் பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராஜஸ்தானில் மற்றொரு போர் விமானம் விழுந்து நொறுங்கியது. பரத்பூரில் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. உஜ்சைன் என்ற பகுதியில் திறந்த வெளியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்ததும் ராணுவத்தினர், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் இருந்த விமானி குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. அவர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து முப்படை தலைமை தளபதி சுனில் சவுகான், விமான படை தளபதி வி.ஆர். சவுத்திரி ஆகியோரிடம் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தகவல்களை கேட்டறிந்தார்.
சுகோய்-30 என்ற விமானம் ரஷியாவிடம் இருந்தும், மிராஜ்-2000 என்ற விமானம் பிரான்சிடம் இருந்தும் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.