சத்தீஸ்கரில் காங்கிரசின் 3 நாள் மாநாடு தொடங்கியது- தமிழகத்தில் இருந்து கே.எஸ்.அழகிரி தலைமையில் 91 பேர் பங்கேற்பு
- முதல் நாளான இன்று காலை மாநாடு தொடங்கியதும், காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இன்று மாலை 4 மணிக்கு நடை பெறும் வழிகாட்டும் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆட்சியை இழந்தது. மேலும் டெல்லி உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, மூத்த தலைவர்கள் சிலர் கட்சியை விட்டு சென்றது என கடந்த 9 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடியை சந்தித்து வந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் தேசிய நடைபயணம் கட்சிக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், இன்று தொடங்கி உள்ள இந்த மாநாட்டில் கட்சியின் பல்வேறு வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகல், இமாச்சல பிரதேசம் முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
முதல் நாளான இன்று காலை மாநாடு தொடங்கியதும், காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பழைய காரிய கமிட்டி கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக வழிகாட்டும் குழு அமைக்கப்படுகிறது. பின்னர் அந்த குழுவின் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் காரிய கமிட்டிக்கு தேர்தல் நடத்துவதா? அல்லது நியமனம் முறையில் உறுப்பினர்களை நியமிக்கலாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.
தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு நடை பெறும் வழிகாட்டும் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
நாளை (சனிக்கிழமை) அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான தீர்மானங்கள் குறித்தும், 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் மற்றும் இளைஞர்கள் நலன், வேலைவாய்ப்பு தொடர்பான தீர்மானங்களும், கல்வி குறித்த தீர்மானங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
26ம் தேதி மதியம் 2 மணிக்கு காங்கிரஸ் தலைவர் உரையும், அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.
இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கர்நாடகா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோராம், நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலஙகளில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களை சந்திப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான வியூகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்தும், காங்கிரஸ் கட்சிக்குள் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
முக்கியமாக பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி குறித்தும் விவாதிக்கப்படுகிறது. ஒத்தக்கருத்துடைய சில கட்சிகள் மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, சமாஜ் வாடி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது.
3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் உள்பட 15 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழகத்தில் இருந்து மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 91 பேர் பங்கேற்றனர்.