இந்தியா

வீடு இல்லை என்று பேச்சு- 52 வயதுக்கு பிறகு தான் ராகுல் யோசிக்க தொடங்கியுள்ளார்: பாரதிய ஜனதா கிண்டல்

Published On 2023-02-27 07:19 GMT   |   Update On 2023-02-27 07:19 GMT
  • 52 வயதுக்குப் பிறகுதான் ராகுல் காந்தி தனது பொறுப்புகள் என்ன என்று யோசிக்கத் தொடங்கியுள்ளாா்.
  • கட்சியினா் அனைவரும் ராகுலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகின்றனா்.

ராய்பூர்:

சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாட்டில் இது தொடா்பாக ராகுல் பேசுகையில், இப்போது எனக்கு 52 வயதாகிறது. இதுவரை எனக்கு சொந்த வீடு கிடையாது. எங்கள் குடும்ப வீடு அலகாபாத்தில் உள்ளது. ஆனால், அது கூட எங்களுக்கு சொந்தமானதல்ல. இப்போது வசித்து வரும் வீடு எனக்கு சொந்தமானதல்ல என்று கூறினார்.

ராகுலின் இந்த பேச்சை பா.ஜ.க. கிண்டல் செய்துள்ளது. இது தொடா்பாக பா.ஜ.க. செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறியதாவது:-

ராகுல் காந்தி தான் பயன்படுத்தும் வீடு, காா் என அனைத்துப் பொருள்களும் தனக்கே சொந்தம் என்ற எண்ணத்துக்கு பழக்கப்பட்டு விட்டாா். அரசு இல்லத்தையே உங்கள் சொந்த வீடாக கருதினால், அனைத்துக்கும் நானே உரிமையாளா் என்ற எண்ணத்தின் உச்சமாகவே கருத முடியும். ராகுல் காந்தி இப்போதுதான் தனது தேச யாத்திரையைத் தொடங்கியுள்ளாா். ஆனால், பாஜகவின் இரு பிரதமா்களும் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்து நாட்டின் நிலவரத்தை அறிந்து கொண்டவா்கள்.

52 வயதுக்குப் பிறகுதான் ராகுல் காந்தி தனது பொறுப்புகள் என்ன என்று யோசிக்கத் தொடங்கியுள்ளாா். அதுவும் காங்கிரஸ் தலைவா் பதவி வகித்து, பின் அதிலிருந்து விலகிய பிறகுதான் இந்த எண்ணம் வந்துள்ளது. அதற்கு முன்பு உங்கள் குடும்பம் என்றால் பொறுப்புகள் எதையும் ஏற்காமல் அதிகாரத்தை அனுபவிப்பது என்றுதான் இருந்து வந்துள்ளது. இப்போதும் கூட காங்கிரஸ் தலைவராக மல்லிகாா்ஜூன காா்கே உள்ளாா். ஆனால், கட்சியினா் அனைவரும் ராகுலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகின்றனா்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News