சொத்தை பிரித்து தராததால் தாயின் பிணத்தை வாங்க மறுத்த மகள்கள்- ஆஸ்பத்திரி பிண அறையில் வைப்பு
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தாயாரிடம் வீடு மற்றும் வங்கியில் உள்ள நகை பணத்தை சரிபாதியாக பிரித்து தர வேண்டுமென அவரது மகள்கள் வற்புறுத்தி வந்தனர்.
- தாயார் மறுப்பு தெரிவித்ததால், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாயாரை ஆஸ்பத்திரியில் தனியாக தவிக்க விட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் ஆர்பி நகர் காலனி சேர்ந்தவர் கிஷ்டவ்வா (வயது 70). இவருக்கு சுடோ, ஏலா என 2 மகள்கள் உள்ளனர்.
கிஷ்டவ்வாவுக்கு கடந்த மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களது மகள்கள் தாயாரை சிகிச்சைக்காக காமரெட்டி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கிஷ்டவ்வாவுக்கு ஆர்.பி. நகரில் சொந்த வீடும், அங்குள்ள வங்கியில் ரூ. 1.70 லட்சம் பணம், நகைகள் உள்ளன. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தாயாரிடம் வீடு மற்றும் வங்கியில் உள்ள நகை பணத்தை சரிபாதியாக பிரித்து தர வேண்டுமென அவரது மகள்கள் வற்புறுத்தி வந்தனர்.
இதற்கு அவரது தாயார் மறுப்பு தெரிவித்ததால், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாயாரை ஆஸ்பத்திரியில் தனியாக தவிக்க விட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிஷ்டவ்வா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மகள்களுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர்.
ஆஸ்பத்திரிக்கு மகள்கள் மற்றும் உறவினர்கள் வந்தனர். மகள்கள் இருவரும் தாயின் வீடு மற்றும் நகை, பணத்தை சரிபாதியாக பிரித்துக் கொடுத்தால் தான் பிணத்தை வாங்கி செல்வோம் என உறவினர்களிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து மகள்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் அவர்கள் வீடு, நகை, பணத்தில் மட்டும் குறியாக இருந்தனர். தொடர்ந்து தாயின் உடலை வாங்க மறுத்தனர். வேறு வழியின்றி அவரது தாயாரின் பிணத்தை பிணவறையில் வைத்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.