லோன் ஆப்-ல் கடன் வாங்கிய கல்லூரி மாணவர் தற்கொலை: ரூ.4 ஆயிரத்துக்கு 16,000 கட்டிய பிறகும் விடவில்லை
- ஆந்திராவில் லோன் ஆப் மூலம் பணம் பெற்றவர்கள் பணத்தை திருப்பி செலுத்திய பின்னரும் மிரட்டி வருவதால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
- நேற்று முன்தினம் தம்பதி தற்கொலை செய்தனர். தற்போது மேலும் ஒரு மாணவர் உயிர் பறிபோய் உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், தாட்சே பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் வெங்கட் சிவா (வயது 20). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் இன்டர்மீடியட் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
அவசர தேவைக்காக லோன் ஆப் மூலம் ரூ.4000 கடன் வாங்கி இருந்தார். கல்லூரி முடிந்தவுடன் தாட்சே பள்ளியில் உள்ள ஓட்டலில் பகுதி நேரமாக வேலை செய்து இதுவரை ரூ.16 ஆயிரம் செலுத்தி உள்ளார்.
இருப்பினும் மேலும் ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும் என லோன் ஆப் கும்பல் வெங்கட் சிவாவை மிரட்டி வந்தனர்.
வெங்கட் சிவாவின் செல்போனில் இருந்த அவரது நண்பர்களின் செல்போனுக்கு வெங்கட் சிவா மோசடி பேர்வழி, பிராடு என எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப்பில் பரப்பினர்.
இதனால் மனவேதனை அடைந்த வெங்கட் சிவா இது குறித்து தனது தந்தைக்கு தெரிவித்தார்.
அவர் பணத்தை தயார் செய்து தருகிறேன் எதற்கும் அச்சப்பட வேண்டாம் என மகனுக்கு ஆறுதல் கூறினார். இருப்பினும் நேற்று கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்த வெங்கட் சிவா அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
தாட்சேபள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கட் சிவா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆந்திராவில் லோன் ஆப் மூலம் பணம் பெற்றவர்கள் பணத்தை திருப்பி செலுத்திய பின்னரும் மிரட்டி வருவதால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
நேற்று முன்தினம் தம்பதி தற்கொலை செய்தனர். தற்போது மேலும் ஒரு மாணவர் உயிர் பறிபோய் உள்ளது.
லோன் ஆப்புகளை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.