ஆந்திராவில் 15 வயது மாணவிக்கு தாலி கட்டிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
- கருத்து வேறுபாடு காரணமாக ஆசிரியரின் மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
- ஆசிரியர் சோமராஜூ மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டியில் ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் இந்தி ஆசிரியராக கே.சோமராஜூ (வயது46) பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் ஆசிரியர் தனது பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவியிடம் 4 மாதங்களாக பழகி வந்துள்ளார். அவருக்கு தனது ஸ்மார்ட்போனை வழங்கியுள்ளார்.
சமீபத்தில் அந்த மாணவியை தனது வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாலி கட்டி தன்னுடன் வைத்துக் கொண்டார்.
இருப்பினும், அந்த மாணவி அவரிடமிருந்து தப்பி தனது வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். நடந்த சம்பவம் பற்றி அவர் தனது பெற்றோரிடம் கூறினார்.
அதைத் தொடர்ந்து அந்த மாணவி, தனது தந்தையுடன் வந்து போலீசில் புகார் அளித்தார்.
ஆசிரியர் சோமராஜூ மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
முதல்கட்ட விசாரணைக்குப் பின்னர் ஆசிரியர் சோமராஜூவை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.