வீடுகட்டும் கனவை தள்ளிப்போட்டு மலை கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்திய இளம்பெண்
- அஞ்சோடா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெம்மா.
- வீடு கட்டுவதை விட கிராமத்திற்கு சாலை வசதி தான் முக்கியம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
திருப்பதி:
மகளிர் தினத்தில் சாதனை படைத்த பெண்களை நினைவு கூர்ந்து வருகிறோம். வீடு கட்டும் கனவை தள்ளிப்போட்டு தனது கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி மலை கிராம பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அவருக்கு இந்நாளில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஆந்திர மாநிலம் அரக்கு அருகே உள்ள அஞ்சோடா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெம்மா. இவருக்கு தோட்ட கோடி புட் மலை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடராவ் என்பவருடன் திருமணம் நடந்தது.
அந்த கிராமத்தில் 10 குடும்பத்தினர் மட்டுமே வசித்து வந்தனர். இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. சிறிய வழிப் பாதையில் பொதுமக்கள் சென்று வந்தனர்.
கர்ப்பிணிகள் மற்றும் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் அவர்களை டோலிகட்டி தூக்கி சென்றனர். இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.
திருமணத்திற்கு பிறகு கிராம செவிலியராக பணியில் சேர்ந்த ஜெம்மா சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவில் சிறிது சிறிதாக பணத்தை சேமித்து வைத்திருந்தார்.
அப்போது தான் அவருக்கு தனக்கு வீடு கட்டுவதை விட கிராமத்திற்கு சாலை வசதி தான் முக்கியம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவருடைய சம்பளத்தில் மாதம் ரூ.4000 சேமிக்க தொடங்கினார்.
4 வருடங்களாக பணத்தை தொடர்ந்து சேமித்தார். இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அவரது கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணியை தொடங்கினார்.
வெளியூரில் இருந்து திருமணமாகி வந்த இளம்பெண்ணின் உறுதி அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது.
இதைத் தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் அவருக்கு ஆதரவாக களமிறங்கினார்கள். அவர்கள் சாலை அமைக்கும் பணியில் தங்களது உடல் உழைப்பை அளித்தனர்.
பழங்குடியின பெண்ணின் இந்த முயற்சி அந்தப் பகுதியில் பரவியது. அவருக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உதவி செய்ய முன்வந்தனர்.
இந்த திட்டத்திற்கு நன்கொடைகள் வரத் தொடங்கியது. அந்த பணத்தை வைத்துக் கொண்டு ஜெம்மா ஒரு மண் சாலையை ஏற்படுத்தினார்.
இந்த சாலையில் தற்போது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ போன்றவை எளிதாக மலை கிராமத்திற்கு செல்ல முடிகிறது. இளம் பெண் ஜெம்மா முயற்சியில் உருவான சாலையால் மலை கிராம மக்களுக்கு தற்போது டோலி கட்டி தூக்கி செல்லும் கடினமான பயணம் போன்ற அவலத்தை நீங்கி உள்ளது.
இந்த சாதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகளிர் தினமான இன்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.
ஜம்மாவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட சாலையை தரமான தார் சாலையாக அமைத்து அதில் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.