பொதுத்துறை வங்கிகளின் 20 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்.. ஏன் தெரியுமா?
- மீதமுள்ள பங்குகள் பொது பங்குகளாக இருக்க வேண்டும்.
- பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு அதிக அளவு பங்குகளை தன்வசம் வைத்துள்ளது.
5 பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றிலும் தனது 20 சதவீத பங்கை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் விதிமுறைகளை பின்பற்றும் விதமாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின், புரோமோட்டார் வசம் 75 சதவிகித பங்குகள்தான் இருக்க வேண்டும் என்பதே செபியின் விதிமுறை.
மீதமுள்ள பங்குகள் பொது பங்குகளாக இருக்க வேண்டும். ஆனால் பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு அதிக அளவு பங்குகளை தன்வசம் வைத்துள்ளது.
எனவே மகாராஷ்டிரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஆகியவற்றின் 20 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்க விரைவில் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்படும் என்று கூறப்படுகிறது.