தேர்வில் சாதித்த மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் - கவுரவித்த சத்தீஸ்கர் அரசு
- பொதுத் தேர்வில் முதல் 10 இடம் பிடிக்கும் மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்படுவர்.
- மேலும் பரிசுத் தொகையும், லேப்டாப்பும் வழங்கப்படும் என சத்தீஸ்கர் முதல் மந்திரி அறிவித்தார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் முதல் மந்த்ரிரி பூபேஷ் பாகெல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார் முதல் மந்திரி.
இதற்கிடையே, ராஜ்பூர் சட்டசபை தொகுதியில் பேசிய முதல் மந்திரி பூபேஷ் பாகெல், நான் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதை பார்த்ததும் இங்குள்ள குழந்தைகள் ஆர்ப்பரித்ததை கண்டேன். உயர பறப்பது என்றால் குழந்தைகளுக்கு என்றுமே உற்சாகம்தான். சாதனை செய்யும் மாணவர்களுக்கு தனித்துவமான பரிசு தரப்படும் என்று கூறினால், அவர்கள் அதிக உத்வேகத்துடன் முயற்சி செய்வர். எனவே 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்படுவர் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தலைநகர் ராய்ப்பூரில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்து மாநில அளவில் முதல் இடங்களைப் பிடித்த மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.அவர்களுக்கு பரிசுத்தொகையும் லேப்டாப்பும் வழங்கப்பட்டது.
பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று கவுரவித்தது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.