இந்தியா

வக்பு திருத்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்- பெண் பிரதிநிதிகள் பங்கேற்க வாய்ப்பு

Published On 2025-02-27 14:02 IST   |   Update On 2025-02-27 14:02:00 IST
  • ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் பரிந்துரை செய்த 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
  • மார்ச் 10-ந்தேதி வக்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி:

வக்பு வாரியங்களுக்கு சொந்தமாக நாடு முழுவதும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்குப்படி, வக்பு வாரியங்களுக்கு 9.4 லட்சம் ஏக்கர் அளவுக்கு சொத்துக்கள் இருப்பது தெரிய வந்தது.

குறிப்பாக, நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் சொத்துக்கள் வக்பு வாரியங்கள் பெயரில் இருப்பது தெரிய வந்தது.

வக்பு வாரிய சொத்துகளை முறைப்படுத்தும் வகையில் வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத 2 நபா்களை உறுப்பினா்களாக இடம்பெற செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டாய பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது.

எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால் பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும், பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டுக்குழு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அந்த குழு பல்வேறு கட்டங்களாக கூடி ஆய்வு செய்தது. அப்போது 66 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. இதில், எதிர்க்கட்சிகளின் 44 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் பரிந்துரை செய்த 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வக்பு மசோதா கூட்டுக்குழு அறிக்கை ஆராயப்பட்டு, 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மார்ச் 10-ந்தேதி தொடங்கவுள்ள பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வில், வக்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News