வீடியோ... ஏ.சி. பெட்டியில் மளமளவென ஏறிய கூட்டம்: நொந்துபோன முன்பதிவு பயணிகள்- ரெயில்வேயின் அல்டிமேட் பதில்...
- முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் பதிவு செய்யாத பயணிகள் திடீரென ஏறி பயணம் செய்வது உண்டு.
- அளவுக்கு அதிகமாக ஏறும்போது முன்பதிவு செய்த பயணிகளுக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
ரெயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதை நாள்தோறும் கேட்டு வருகிறோம். சில நேரங்களில் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ரிசர்வேசன் (முன்பதிவு) பெட்டிகளில் ஏறிவிடுவார்கள். இதனால் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகள் மிகுந்த சிரமத்துடன் பயணம் மேற்கொள்வது உண்டு.
ஆனால் ஏ.சி. பெட்டியில் முன்பதிவு செய்யாத பயணிகள் கூட்டமாக ஏறியதால் முன்பதிவு செய்த பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்த சம்பவம் பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடந்துள்ளது.
ராய் என்பவர் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
திடீரென ஏ.சி. பெட்டிக்குள் ஏறிய முன்பதிவு இல்லாத பயணிகள் இருக்கைகளில் அமர்ந்துள்ளனர். மேலும், பலர் வாசல் மற்றும் கழிப்பறை அருகில் நின்று பயணம் செய்கிறார்கள்.
இது தொடர்பாக ராய் உள்ளிட்ட முன்பதிவு செய்த பயணிகள் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்து 45 நிமிடங்கள் ஆகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் விரக்தி அடைந்த ராய் "வீடியோவை வெளியிட்டு, தயது செய்து இந்த வீடியோவை பாருங்கள். 12303 பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏ.சி. பெட்டி, பாட்னா அருகில், பொதுப்பெட்டி (முன்பதிவு செய்யப்படாத பெட்டி) போன்று உணர முடிந்தது. இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு ரெயில்வே, "பயணிகளின் கவலையை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். சிறந்த உதவியை உங்களுக்கு வழங்குவதை உறுதி செய்வோம்" எனப் பதில் அளித்துள்ளது. பின்னர் எந்தவொரு விசாரணை இன்றி தனது புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ராய் தெரிவித்துள்ளார்.