ரூ. 2 ஆயிரம் கடனுக்காக மனைவி படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட "லோன் App" ஏஜெண்ட்: அவமானத்தால் கணவன் தற்கொலை
- பொருளாதார நெருக்கடியால் 2 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
- கடன் பெற்ற ஒரு வாரத்தில் திருப்பி செலுத்த வற்புறுத்தல்.
ஆந்திர மாநிலத்தில் கடன் வழங்கும் செயலி (Loan App) ஏஜெண்ட்டின் மோசமான செயலால் திருமணம் முடிந்த இரண்டு மாதத்திற்குள் வாலிபர் ஒருவர் உயிரிழந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
கடன் வழங்கும் செயலிகள் சிலரின் பொருளாதார நிலையை பயன்படுத்தி அவர்களை கடன் பெற தூண்டுகின்றன. கடன் வழங்கும்போது நல்ல விதமாக பேசும் ஏஜெண்ட்-கள் கடன் வழங்கிய பின்னர் அதை வசூலிக்கும்போது மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்வதுண்டு. இதுபோன்ற சம்பவத்தால்தான் வாலிபர் உயிர் பறிபோகியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நரேந்திரா. இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். 25 வயதாகும் நரேந்திரா கடந்த அக்டோபர் மாதம் அகிலா என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.
இந்த ஜோடி விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தது. பருவமழை மற்றும் வானிலை காரணமாக கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. இதனால் அவருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் கடன் வழங்கும் செயலியை நாடியுள்ளார். அந்த செயலியில் 2 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
கடன் பெற்ற நிலையில் பணத்தை உடனடியாக செலுத்தும்படி செயலி ஏஜெண்ட் துன்புறுத்தியுள்ளார். மோசமான வார்த்தைகளால் திட்டி தகவல் அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து நரேந்திரா கடனை முழுமையாக அடைக்க முடிவு செய்தார். அதற்கு பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து தகவல் அனுப்பப்பட்டு வந்தது.
அந்த ஏஜெண்டிடம் நரேந்திரா மனைவி மற்றும் உறவினர்கள் செல்போன் நம்பர் இருந்துள்ளது. ஒரு வாரமாக மோசமான வார்த்தைகளால் மெசேஜ் அனுப்பி வந்த நிலையில், நரேந்திராவின் மனைவி அகிலா படத்தை ஆபாசமாக சித்தரித்து, அகிலா மற்றும் நரேந்திரா உறவினர்களுக்கு அந்த ஏஜெண்ட் அனுப்பியுள்ளார். இந்த படத்துடன் விலை நிர்ணயித்துள்ளார்.
தன்னுடைய ஆபாச படம் தனது செல்போனுக்கு வந்தது குறித்து நரேந்திராவிடம் அகிலா விசாரிக்க, அப்போதுதான் கடன் வழங்கும் செயலயில் கடன் பெற்றதாகவும், கடன் பெற்ற ஒரு வாரத்தில் இருந்து தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அவர்களது உறவினர்கள் பலர் இந்த படம் தொடர்பாக நரேந்திராவிடம் விசாரித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த நரேந்திரா தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
காதல் திருமணம் செய்த மூன்று மாதத்திற்குள் 2 ஆயிரம் கடனுக்கான நரேந்திரா தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், செயலி ஏஜெண்ட் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மாநில மற்றும் மத்திய அரசுகள் இதுபோன்ற கடன் வழங்கும் செயலிகளை நம்பி, கடன் பெற்று சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இருந்தாலும் பொருளாதார சூழ்நிலையில் சிக்குபவர்கள் இதுபோன்ற செயலிகளில் கடன் பெற்று தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர். இதுபோன்ற செயலிகளை கண்டறிந்து அரசுகள் நிரந்தரமாக தடை செய்தால்தான் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.